*காருகுறிச்சி அருணாசலம்* அவர்களின் வாழ்க்கை வரலாறு



காருகுறிச்சி அருணாசலம்
குஅழகிரிசாமி எழுதிய  இக்கட்டுரை 10.12.2000 அன்று ஆண்டில் தினமணிக் கதிர் இதழில் வெளியானது.

சங்கீதச் சக்கரவர்த்தி திருவாடுதுறை ராஜரத்தினம் பிள்ளையின் மறைவுக்குப் பிறகு காலியாயிருந்த நாகஸ்வர சிம்மாசனத்தில் அமர்ந்து ஆட்சி செய்தவர் அவரது சீடர் அமரர் காருகுறிச்சி அருணாசலம். ராஜரத்தினம் மறைந்த இழப்பைக் காருகுறிச்சிதான் ஈடு செய்தார். சினிமா ரசிகர்களுக்குக் ‘கொஞ்சும் சலங்கை’யில் ‘சிங்காரவேலனே தேவா…’ பாட்டில் அவர் வாசித்த வாசிப்பு மறந்திருக்காது. கர்நாடக சங்கீத ரசிகர்களுக்கோ நாகஸ்வரத்தில் அவர் பிடித்த கொஞ்சலும் குழைவுமான ஒவ்வொரு பிடியும் நினைவில் மதுரமாகத் தேங்கிக் கிடக்கும். அவரது மறைவுக்கு ஒரு வாரம் கழித்து அந்த இசை மேதைக்கு எழுத்தால் அஞ்சலி செலுத்தினார் இலக்கிய மேதை கு. அழகிரிசாமி. காருகுறிச்சியின் நெருங்கிய நண்பர் அவர். அஞ்சலிக் கட்டுரை ‘நவசக்தி’யில் 1964, ஏப்ரல் 14ஆம் தேதி வந்தது. கு அழகிரிசாமியின் கட்டுரைத் தொகுப்பை வெளியிட்ட தேன்மழை பதிப்பகத்தார் அத்தொகுப்பில் இதை மறுபிரசுரம் செய்தனர். இசை ரசிகர்களின் பார்வைக்கு இதை முன்வைக்கிறோம்.

கடந்த பத்து ஆண்டுகளாகச் சங்கீத உலகில் பெரும் புகழ் பெற்றுத் திகழ்ந்து சென்ற வாரம் அமரராகி விட்ட நாகஸ்வர வித்வான் காருகுறிச்சி அருணாசலத்துக்கு அதற்கும் பத்து வருஷங்களுக்கு முன்பே இந்தப் புகழ் கிட்டியிருக்க வேண்டும். ஆனால் மதுரைக்கு வடக்கே அவருடைய புகழ் பரவுவதற்குப் பத்து வருஷ காலம் பிடித்தது. இது ஆச்சரியப்பட வேண்டிய ஒரு செய்தியாகும்.

சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன் நான் மலாயாவில் இருந்தபோது ஒரு நாள் ஒரு வாரப் பத்திரிக்கையில் (“ஆனந்த விகடன்” என்று ஞாபகம்) காருகுறிச்சி அருணாசலத்தின் நாகஸ்வர வாசிப்பைப் பற்றி ஈ. கிருஷ்ணய்யர் விமரிசனம் எழுதியிருந்ததைப் பார்த்தேன். விமரிசனத்தில் அருணாசலத்தின் இசைத்திறனை உரிய முறையில் வானளாவப் புகழ்ந்தில்ருந்தார் கிருஷ்ணய்யர். இதைப் பார்த்ததும் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. ‘நம் அருணாசலத்தின் கச்சேரி சென்னையில் நடக்க ஆரம்பித்துவிட்டது. அதை ஈ.கிருஷ்ணய்யர் போன்ற மேதாவிகள் பாராட்டவும் தொடங்கி விட்டார்கள். இனி தமிழ்நாடெங்கும் அவருடைய புகழ் பரவிவிடும் என்பதில் சந்தேகமில்லை’ என்று எனக்குள்ளேயே சொல்லிக் கொண்டேன்.

அருணாசலத்தை அனேகமாக அவருடைய பதினெட்டாவது வயதிலிருந்து எனக்குத் தெரியும். அவருடைய சொந்த ஊரான காருகுறிச்சி, திருநெல்வேலி ஜில்லா அம்பாசமுத்திரம் தாலுகாவில் இருக்கிறது. காருகுறிச்சிக்கு ரயில்வே ஸ்டேஷன் உண்டு. மிகப் பெரிய கிராமம். அவருடைய உறவினர்கள் எங்கள் கோவில்பட்டிப் பகுதியில் என் சொந்த ஊரான இடைசெவல் கிராமத்திலும் எங்கள் ஊருக்கு மூன்று மைல் தென்கிழக்கே உள்ள குருமலையிலும், கோவில் பட்டி நகரிலும் வசிக்கிறார்கள். அருணாசலத்துக்கு இருபது வயது ஆவதற்கு முன்னே அவருக்கும் இடைசெவல் கிராமத்தைச் சேர்ந்த முத்தையாப் புலவரின் கடைசி மகள் ராமலக்ஷ்மிக்கும் திருமணம் நடைபெற்றது. அப்போது அருணாசலம் திருவாவடுதுறையில் நாகஸ்வரச் சக்ரவர்த்தி ராஜரத்தினம் பிள்ளையிடம் குருகுலவாசம் செய்து கொண்டிருந்தார். காருகுறிச்சியில் திருமணம் முடிந்தபின் தம்பதிகள் எங்கள் ஊருக்கு வந்து ஒரு மாதம் இருந்தார்கள். அருணாசலத்தின் மைத்துனர் ஒருவரும் நானும் ஒரே வகுப்பில் படித்த நண்பர்கள். இதனால் அநேகமாக தினம்தோறும் போய் அருணாசலத்தைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. மாலை நேரங்களில் நாலைந்து பேர் சேர்ந்து ஒன்றாகவே உலாவப் போவோம். அப்போது ஒரு சமயம் ஆறுமுக நாவலருக்கும், ராமலிங்க அடிகளுக்கும் இடையே நடந்த கோர்ட் வழக்கை விவரமாக எங்களுக்கு எடுத்துச் சொன்னார் அருணாசலம்.

அருணாசலம் அப்போது குடுமி வைத்திருந்தார். மிக நீண்ட தலைமுடி. ஆனால் பார்ப்பதற்குச் சிறு பையனைப் போலவே இருப்பார். யாருடனும் மிக மிக அன்போடு பேசுவார். பழகுவார்.

அருணாசலம் புலவர் எனப்படும் குலத்தில் பிறந்தவர். புலவர் ஜாதியாரைப் பண்டாரம் என்றும் சொல்வதுண்டு. சாதாரணமாக இந்த சாதியினரில் ஏழைகளாக உள்ளவர்கள் பூ கட்டி விற்பதையும், காளி கோயில் போன்ற கிராமத் தேவதைகளின் கோவில்களில் பூஜை செய்வதையும் தொழில்களாகக் கொண்டவர்கள். புலவர் என்ற பெயருக்கேற்ப இந்தக் குலத்தில் பிறந்தவர் பலர் தமிழில் புலமை பெற்று விளங்கினார்கள். அநேகர பரம்பரை நாகஸ்வர வித்வான்கள். அருணாசலத்தின் மனைவியுடைய தமக்கையர் இருவரம் குருமலையைச் சேர்ந்த இரு சிறந்த நாகஸ்வர வித்வான்களைத்தான் மணந்திருக்கிறார்கள்; காருகுறிச்சி அருணாசலத்தின் தந்தையும் ஒரு நாகஸ்வர வித்வான்.

கல்யாணமான சில ஆண்டுகளுக்குப் பிறகு அருணாசலம் தன் சொந்த ஊரான காருகுறிச்சியில் ஒரு வீடு கட்டி அதற்கு ‘ராஜரத்தின விலாஸ்’ என்று பெயரிட்டார். கிரகப் பிரவேசத்துக்கு ராஜரத்தினம் பிள்ளை வந்திருந்து கச்சேரி செய்து தமது அருமை மாணவரையும் மாணவரின் மனைவியையும் ஆசிர்வதித்தார்.

திருமணமாகி ஏழெட்டு வருடங்களாகியும் குழந்தைகள் இல்லையே என்ற ஒரு குறை அருணாசலத்துக்கு இருந்தது. இதனால் முதல் மனைவி வீட்டாரின் சம்மதத்தோடும் உதவியோடும் குருமலைக் கந்தசாமிப் புலவரின் மகளை இரண்டாவது மனைவியாகத் திருமணம் செய்து கொண்டு, முதல் மனைவியின் பிறந்தகத்துக்கு வந்து விருந்துண்டார். அப்போது இடைசெவல் கிராமத்தில் ஊரே திரண்டு வந்து அருணாசலம் தம்பதிகளை வரவேற்றது.

எல்லோருடனும் அன்பாகப் பழகுவதும் எந்தக் கூட்டத்திலும் தேர்ந்தவர்களைப் பார்த்த மாத்திரத்தில் அருகில் வந்து உரிமை பாராட்டிப் பேசிக் களிப்பதும் அவர் இயல்பு. எத்தனை வருடமானாலும் நண்பர்களை மறக்கவே மாட்டார். இப்படித் தன்னடக்கம் நிறைந்த வித்வான்கள் தமிழ்நாட்டில் வெகு சிலரே இருக்க முடியும்.

1958 டிசம்பரில் சென்னையில் நடந்த அகில இந்திய எழுத்தாளர் மாநாட்டில் கச்சேரி செய்வதற்காக அருணாசலம் வந்திருந்தார். மஞ்சரி ஆசிரியர் தி.ஜ.ர., எழுத்தாளர்கள் திரு. சிதம்பர சுப்பிரமணியம், திரு சுந்தர ராமசாமி ஆகியவர்களுடன் நான் மண்டபத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தேன். “அருணாசலத்தைப் பார்த்துப் பத்து வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இப்போது அவர் புகழ்ச் சிகரத்தில் இருப்பவர். முன் போல நம்முடன் பேசுவாரா?” என்று எனக்கு ஓரளவு சந்தேகமும் இருந்தது. ஆனால் மண்டபத்துக்குள் வந்து கொண்டிருந்த அருணாசலம் என்னைப் பார்த்ததும் ஆவலோடு என் அருகில் வந்து க்ஷேம லாபங்களை விசாரித்தார். தி.ஜ.ர.வுக்கும் சிதம்பர சுப்பிரமணித்துக்கும் அவரை அறிமுகம் செய்து வைத்தேன். உடனே தி.ஜ.ர. “ராஜரத்தினம் பிள்ளைக்குப் பிறகு இன்று நிகரற்ற முறையில் வாசித்து வருகிறீர்கள். உங்கள் குருவின் வாசிப்பைக் கேட்பது போலவே இருக்கிறது,” என்று கூறினார். அதைக் கேட்ட அருணாசலம், “இல்லை இல்லை. என்னைவிடப் பல மடங்கு சிறப்பாக வாசிக்கக்கூடிய நாகஸ்வர வித்வான்கள் பலர் இருக்கிறார்கள்,” என்று திரும்பத் திரும்பக் கூறினார். இந்தத் தன்னடக்கத்தை இன்று நினைத்தாலும் எனக்கு மெய் சிலிர்க்கிறது.

தி.ஜ.ர. அத்துடன் அன்றைய கச்சேரியில் இங்கிலீஷ் நோட் ஒன்றை வாசிக்கும்படிச் சொன்னார். அதன்படி அன்று அருணாசலம் வாசித்த ‘இங்கிலீஷ் நோட்’ ஈடு இணையற்றது. அவருடைய குருநாதர்கூட இவ்வளவு விஸ்தாரமாக நோட் வாசித்து நான் கேட்டதில்லை.

அருணாசலம் நாகஸ்வரம் வாசிப்பது போலவே வாய்ப்பாட்டும் அற்புதமாகப் பாடுவார். பாடும்போது ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பாட்டையோ, ராகத்தையோ நிறுத்தி, “இந்த இடத்தில் எங்கள் வாத்தியார் அற்புதமாக வாசிப்பார். அவர் வாசித்துக் கேட்க வேண்டும்” என்று பரவசத்தோடும், பக்தியோடும் சொல்வார். ஒரு ராகத்தைப் பாடி முடிக்கும் முன் ஐந்தாறு தடவைகள் இவ்வாறு கூறிக் குருவின் மேதாவிலாசத்துக்குப் புகழ்மாலை சூட்டி வணங்குவார். குருவே அருணாசலத்துக்கு உயிரும், தெய்வமும் என்று சொல்லி விடலாம். அதேபோல் இந்தக் சிஷ்யரிடத்தில் குருவும் அளவு கடந்த பாசம் வைத்திருந்தார். திருநெல்வேலி ஜில்லாவில் ராஜரத்தினம் பிள்ளை கச்சேரி செய்ய எந்த ஊருக்கு வந்தாலும் அருணாசலமும் அங்கே வந்து விடுவார். குருவும் அவரோடு ஜோடியாக வாசிக்கும் வேறு சிஷ்யரும் இசையமுதத்தை வழங்கிக் கொண்டிருக்கும்போது அருணாசலம் மேடையின் பின்பக்கமாக அமர்ந்திருப்பார். கச்சேரி முடிவதற்குமுன் இரண்டு காரியங்கள் நடக்கும். இதை ஒவ்வொரு கச்சேரியின் போதும் தவறாமல் பார்க்கலாம். ஒன்று, அருணாசலத்தை ராஜரத்தினம் பிள்ளை முன்னால் வரச் சொல்லித் தம் கைவிரல்களைப் பிடித்துவிடச் சொல்வார். அதன்பின் ஓர் அரைமணி நேரத்துக்கு அருணாசலத்தைத் தம்மோடு சேர்ந்து வாசிக்கும்படி கூறுவார். ராஜரத்தினம் பிள்ளையோடு கச்சேரி செய்ய அருணாசலத்தை ஏற்பாடு செய்யாமல் இருந்தாலும் கச்சேரி முடிவில் இருவரும் சேர்ந்து வாசிக்கும் நிகழ்ச்சி தவறாமல் நடைபெறும்.

ராஜரத்தினம் பிள்ளை மலாயாவுக்கு வந்திருந்தபோது, “உங்களிடத்தில் அருணாசலத்துக்குள்ள பக்திக்கு எல்லையே கிடையாது” என்றேன். அவர் மகிழ்ச்சியோடு சிரித்துக் கொண்டு, “அதனால்தான் அவன் நல்லா வாசிக்கிறான்” என்றார். சிஷ்யரை எண்ணி அவர் அடைந்த பூரிப்பையும் ஆனந்தத்தையும் அளவிட்டுக் கூற முடியாது.

“அருணாசலத்தின் வாய்ப்பாட்டும் அபாரமாக இருக்கிறது” என்று நான் சொன்னபோது, “அவன் பாடுகிறானா…! எனக்குத் தெரியாதே!” என்று ஆச்சரியத்தோடு சொன்னார் ராஜரத்தினம் பிள்ளை. அவர் சொன்னது எனக்கும் ஆச்சரியத்தை உண்டு பண்ணியது. அருணாசலம் இவ்வளவு அபாரமாகப் பாடும் விஷயம் குருவுக்குத் தெரியாமல் இருக்கிறதே என்பதுதான் என் ஆச்சரியத்துக்குக் காரணம்.

குருமலையில் 1946ல் அருணாசலத்தின் ஷட்டகரான நாகஸ்வர வித்வான் பொன்னுசாமிப் புலவரின் தம்பிக்குத் திருமணம் நடைபெற்றபோது அருணாசலம் வந்திருந்தார். அப்போது கல்யாண வீட்டில் நண்பர்களாகிய நாங்கள் அருணாசலத்தைப் பாடும்படிக் கூறினோம். நடபைரவி ராகத்தைச் சுமார் ஒன்றரை மணி நேரம் பாடினார். பாடிய பிறகு, “வாய்ப்பாட்டுக் கச்சேரி செய்யவும் எனக்கு ஆசைதான். நாகஸ்வர வாசிப்பில் மட்டுமே கவனம் செலுத்தாமல் வாய்ப்பாட்டுக் கச்சேரியும் செய்தால் எங்கள் வாத்தியார் கோபிப்பார்,” என்று சொன்னார் அருணாசலம். இதனால்தான் அருணாசலம் வாய்ப்பாட்டு கச்சேரி செய்யவே இல்லை. தான் பாடுவதைக்கூட குருநாதர் அறியாமல் மறைத்துக் கொண்டார்.

அருணாசலத்துக்கு மிக இனிய குரல். உதவும்படியான அற்புத சாரீரம். நாகஸ்வாரத்தில் போடும் எந்தச் சங்கதியும் அவர் வாய்ப்பாட்டில் பேசும்.இவ்வளவு சாரீர வளத்துடன் சிரமசாத்தியமான பிடிகளையும் அனாயாசமாகப் பிடித்துக் கற்பனைப் பெருக்குடன் வாய்ப்பாட்டுச் சங்கீதத்தில் ராகாலாபனம் செய்யக்கூடியவர்கள் எனக்குத் தேர்ந்த வரையில் ராஜரத்தினம் பிள்ளை, விளாத்திகுளம் நல்லப்பசாமி பாண்டியன், எம் எஸ் சுப்புலக்ஷ்மி போன்ற சிலரே.

கோவில்பட்டி பக்கங்களில் ராஜரத்தினம் பிள்ளையின் கச்சேரி எங்காவது ஏற்பாடாயிருந்தால் அருணாசலம் மறந்துவிடாமல் இடைசெவலில் உள்ள எங்கள் நண்பர் குழாத்துக்குக் கடிதம் அனுப்பி, கச்சேரிக்கு வந்து விடும்படி அறிவிப்பார். எங்கள் ஊர் மார்க்கமாக அருணாசலம் எந்த ஊருக்குக் கச்சேரி செய்யப் போனாலும் எங்களை வந்து பார்த்து, “ஒரு மணி நேரம் இங்கே தங்க அவகாசம் இருக்கிறது. என்ன ராகம் பாட வேண்டும்?” என்று கேட்பார்.

“இங்கே வந்தால்தான் அபூர்வ ராகங்களைப் பாடச் சந்தர்ப்பம் கிடைக்கிறது. கச்சேரி செய்யப்போனால் சினிமாப் பாட்டுக்களையும் மகுடியையும்தான் ஊதும்படிச் சொல்கிறார்கள்,” என்பார். நாங்கள் கனகாங்கி, ரத்னாங்கி, வகுளாபரணம், நாமநாராயணி போன்ற ராகங்களைப் பாடச் சொல்லிக் கேட்போம். ஆர்வத்தோடு பாடி எங்களை ஆனந்தக் கடலில் ஆழ்த்திவிட்டுத் தம் காரில் அருணாசலம் புறப்படுவார்.

இப்படிச் சுமார் பதினைந்து வருஷங்களுக்குமுன் அருணாசலத்தோடு நெருங்கிப் பழகும் நாட்கள் எத்தனையோ நினைவுக்கு வருகின்றன. அவருடைய அருங்குணங்களை நினைக்கும்போது அவரது மறைவு சொல்லொணாத் துயரத்தை அளிக்கிறது. அவரது அகால மரணத்தால் சங்கீத உலகம் ஒரு மேதையை இழந்து விட்டது. கோவில்பட்டி வட்டாரத்தில் அவரோடு சிறு வயதில் பழகிய என்னைப் போன்றவர்கள் கிடைத்தற்கரிய அருங்குணச் செல்வனான ஒரு பால்ய நண்பனையும் இழந்து விட்டார்கள்.

எங்கள் செல்வம், இந்தியாவின் பொக்கிஷம், அருணாசலத்தின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.
காற்றின் நறுமணம் - காருகுறிச்சி  நூற்றாண்டு.
 எஸ்.ராமகிருஷ்ணன்.

திருமண விழாக்களுக்கு ஊர் ஊராகச் சென்று மைக்செட் போடும் வேலாயுதம் எப்போதும் போடும் முதல் ரெக்கார்டு காருகுறிச்சியின் நாதஸ்வரம்தான். அந்த மங்கல இசையை ஒலிக்க விட்டவுடன்தான் கல்யாண வீடு ஒளிரத் தொடங்கும். உண்மையில் சந்தோஷத்தின் அடையாளமாகவே நாதஸ்வரம் ஒலிக்கிறது.

அந்த வாத்தியம் கரிசல் மனிதனின் அன்பைப் போல வீரியமானது. உக்கிரமானது. நாட்டுப்பசுவின் பாலுக்கெனத் தனி ருசியிருப்பது போலவே காருகுறிச்சியாரின் நாதஸ்வரத்திற்கும் தனிருசி இருக்கிறது.
அந்த வேலாயுதம் மைக்செட் போடும் இடங்களில் சிறுவர்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்ப்பார்கள். காருகுறிச்சியாரின் இசைத்தட்டினை உறையிலிருந்து எடுத்து அவரே தான் இசைக்க விடுவார். வேறு யாரும் அந்த இசைத்தட்டினைத் தொடக்கூடாது. தொட விடமாட்டார். ஆயிரமாயிரம் கல்யாண வீடுகளில் ஒலித்த அந்த இசையைக் கேட்ட கிராமவாசிகளுக்குப் பெரிய சங்கீத ஞானம் கிடையாது. ஆனால், மயில் ஆடுவதை ரசிப்பது போலத் தன்னை மறந்து நாதஸ்வர இசையில் கரைந்துபோயிருப்பார்கள்.

காருகுறிச்சியாரின் ரெக்கார்டு ஒலித்து முடிந்தவுடன் வேலாயுதம் கண்களைத் துடைத்துக்கொள்வார். நல்ல இசை கண்ணீர் வரவழைக்கக்கூடியதுதானே. அதை உறையில் போட்டு மரப்பெட்டியினுள் வைக்கும்போது அவரிடம் காணப்படும் பணிவும் அக்கறையும் அலாதியானது. இசைத்தட்டில் வெளியாகியிருந்த காருகுறிச்சியாரின் புகைப்படத்தை மட்டும்தான் வேலாயுதம் பார்த்திருக்கிறார். அவரை நேரில் கண்டதில்லை. ஆனால் நாதஸ்வர இசையின் வழியே ஒவ்வொரு நாளும் அவர் காருகுறிச்சியாரைப் பார்த்தபடியேதான் இருக்கிறார்.
தென்மாவட்டக் கோயில்களிலும், சினிமா தியேட்டரில் ஷோ தொடங்குவதற்கு முன்பும் காருகுறிச்சியின் நாதஸ்வரம் ஒலிப்பது வழக்கம். அது நம்மை மகிழ்வோடு அழைக்கும் குரல். வேலாயுதம் எத்தனையோ முறை காருகுறிச்சியாரின் ரெக்கார்டினைக் கேட்டு ரசித்திருந்தபோதும், ஒவ்வொரு முறையும் புதிதாகக் கேட்பதுபோலவே அமர்ந்திருப்பார். அவர்தான் ஒரு நாள் சொன்னார்

“நாதஸ்வர இசை கலக்கும்போதுதான் காற்றுக்கு மணம் வருது. தொலைவிலிருந்து கேட்டுப்பாருங்க. அந்த வாசனை தெரியும்.”

அது உண்மை. கரிசலின் வெம்பரப்பில் வெயிலைப் போலவே ஊர்ந்து செல்லும் நாதஸ்வர இசைக்கு மணமிருக்கிறது. தாழம்பூவின் மணம்போல அலாதியான மணமது.
எங்கோ களை பறித்துக்கொண்டும் தண்ணீர் பாய்ச்சிக்கொண்டும் இருப்பவர்கள்கூட தொலைவிலிருந்து சஞ்சரிக்கும் நாதஸ்வர இசையைக் கேட்டு ரசித்தபடியேதான் வேலை செய்வார்கள்.

காருகுறிச்சியாரின் சங்கீதம் குற்றால அருவியைப் போலத் தனித்துவமானது. குளிர்ச்சியானது. மனதையும் உடலையும் சாந்தப்படுத்தக் கூடியது. இசை ஞானம் கொண்டவர்கள் மட்டுமன்றி எளிய மனிதர்களும் அவரது இசையில் கரைந்துபோயிருந்தார்கள்.

இந்த ஆண்டு காருகுறிச்சியாரின் நூற்றாண்டு விழா தொடங்குகிறது. தான் வாழும் காலத்தில் உரிய அங்கீகாரமும் கௌரவமும் பெற்ற கலைஞர் காருகுறிச்சியார்.

கோவில்பட்டியில் வசித்த அவர் புதுவீடு கட்டியபோது அதன் திறப்பு விழாவிற்குத் திரையுலக நட்சத்திரங்கள் திரண்டு வந்திருந்தார்கள். கோவில்பட்டி மக்களின் நினைவில் அது அழியாத காட்சியாகப் பதிந்துள்ளது. நடிகர் திலகம் சிவாஜியும் ஜெமினி கணேசன் சாவித்திரியும் காருகுறிச்சியார் மீது காட்டிய அன்பு நிகரற்றது. வேறு எந்த இசைக்கலைஞருக்கும் இப்படியான அபூர்வ நட்பு சாத்தியமாகியிருக்குமா எனத் தெரியவில்லை.

இசைமேதையாக இருந்ததோடு பழகுவதற்கு அத்தனை நேசத்துடன், உண்மையான பற்றுடன் இருந்தவர் காருகுறிச்சியார். பெரிய ஜமீன்தார்கள் தொடங்கி பெட்டிக் கடைக்காரர் வரை அவர் ஒரேபோலத்தான் நட்பு பாராட்டினார். பிரபலமான இசைக்கலைஞராக விளங்கியபோதும், கோவில்பட்டிப் பேருந்து நிலையத்தில் உள்ள பிள்ளையார் கோயிலுக்குக் கச்சேரி செய்துகொடுக்க அவர் மறக்கவேயில்லை. பேருந்து நிலையத்தினை ஒட்டிய மேடையில் அவர் கச்சேரி செய்யும் போது அதைக் கேட்டவர்கள் சாமானிய மக்கள். அவர்கள் மனதில் இன்றும் அந்த இசை ஒலித்தபடியேதானிருக்கிறது.

கோவில்பட்டியில் அவர் கட்டிய வீட்டைப் போல தன் மகள் திருமணமாகிப் போன பழனியிலும் ஒரு வீடு கட்டிக் கொடுத்திருக்கிறார் காருகுறிச்சியார். மகள் பிறந்த வீட்டினை விட்டு புகுந்தவீடு போனபோதும் அதே வீட்டில் இருப்பதுபோல உணர வேண்டும் என ஆசைப்பட்ட பாசமிகு தந்தையாக இருந்திருக்கிறார். இந்தச் செய்தியை என்னிடம் சொன்னவர் காருகுறிச்சியாரின் உறவினர் முருகேசன்.

தஞ்சை மண்ணின் இசைக்கலைஞர்கள் கொண்டாடப்பட்ட அளவிற்குத் தென்மாவட்ட இசைக்கலைஞர்கள் கொண்டாடப்படவில்லை என்ற ஆதங்கம் எனக்கிருந்தது. அதன் காரணமாகவே ‘சஞ்சாரம்’ நாவலை எழுதினேன். அந்த நாவலை எழுதும் நாள்களில் நிறைய நாதஸ்வரக் கலைஞர்களைச் சந்தித்தேன். அவர்கள் மனதில் ராஜரத்தினம் பிள்ளைக்கும் காருகுறிச்சிக்கும் உள்ள இடம் தெய்வத்திற்கு நிகரானது.

நாதஸ்வரக் கலைஞர்கள் இன்று அழகான சில்க் ஜிப்பா அணிந்து கௌரவமாக மேடையில் அமர்ந்து வாசிக்கிறார்கள் என்றால் அதற்கு ராஜரத்தினம் பிள்ளைக்குத்தான் நன்றி சொல்லவேண்டும். ‘அவர் இசைச் சக்கரவர்த்தி. மன்னரைப் போலத்தான் உடையும் உடுத்தியிருப்பார். அவர் காலத்திற்கு முன்பு வரை நாதஸ்வரக் கலைஞர்கள் மேல்சட்டை அணிய முடியாது. துண்டுதான். ஆனால் ராஜரத்தினம் பிள்ளையும் அவரின் சீடர் காருகுறிச்சியாரும் எங்களுக்கு கௌரவத்தை உருவாக்கித் தந்தார்கள். அவர்களை ஒவ்வொரு நாளும் வணங்கியே கச்சேரி செய்கிறோம்’ என்றார் ஒரு நாதஸ்வரக் கலைஞர்

நாவல் எழுதும் பணியில் ஒருமுறை கழுகுமலைக்குச் சென்றிருந்தேன். முருகன் கோயிலில் கேட்ட நாதஸ்வர இசை அப்படியே காருகுறிச்சியாரின் சாயலில் இருந்தது. கோயிலில் கேட்கும்போது நாதஸ்வரம் மெய்மறக்கச் செய்து விடுகிறது. உண்மையில் கற்சிலைகள்கூடக் கைதட்டும் அளவிற்கு வாசிக்கிறார்கள். அந்த வாசிப்பு, தாயின் கைகளைப் பிடித்துக்கொண்டு செல்லும் மகளைப்போலவே தோன்றியது. அந்த நாதஸ்வரக் கலைஞரைப் பாராட்டியபோது அவர் தன் பர்சில் இருந்த காருகுறிச்சியார் படத்தைக் காட்டி ‘‘அவரு மாதிரி வாசிக்க முடியாதுங்க. புலிவேஷம் கட்டிக்கிடுறது மாதிரி நாங்க வாசிக்கிறது வெறும் வேஷம்” என்றார்.

பணிவின் காரணமாக அப்படிப் பேசிய போதும் ஒப்பற்ற நாதஸ்வரக் கலைஞர்கள் பலர் உருவாகக் காருகுறிச்சியார் முக்கியக் காரணமாக இருந்திருக்கிறார்.

காருகுறிச்சியாரின் மறைவை ஒட்டி எழுதிய கட்டுரையில் எழுத்தாளர் கு.அழகிரிசாமி காருகுறிச்சியார் பற்றி மிகச்சிறப்பாக எழுதியிருக்கிறார். கு.அழகிரிசாமியின் சொந்த ஊரான இடைசெவலில்தான் காருகுறிச்சி பெண் எடுத்திருந்தார். ஆகவே அவரை அழகிரிசாமி நன்றாக அறிந்தவர்.

அந்தக் கட்டுரையில் ‘`அருணாசலம் நாதஸ்வரம் வாசிப்பது போலவே வாய்ப்பாட்டும் அற்புதமாகப் பாடுவார். பாடும்போது ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பாட்டையோ, ராகத்தையோ நிறுத்தி, `இந்த இடத்தில் எங்கள் வாத்தியார் அற்புதமாக வாசிப்பார். அவர் வாசித்துக் கேட்க வேண்டும்’ என்று பரவசத்தோடும் பக்தியோடும் சொல்வார். ஒரு ராகத்தைப் பாடி முடிக்கும் முன் ஐந்தாறு தடவை இவ்வாறு கூறிக் குருவின் மேதாவிலாசத்துக்குப் புகழ்மாலை சூட்டி வணங்குவார். குருவே அருணாசலத்துக்கு உயிரும், தெய்வமும் என்று சொல்லிவிடலாம். அதேபோல் இந்த சிஷ்யரிடத்தில் குருவும் அளவு கடந்த பாசம் வைத்திருந்தார்’’ என்று கு.அழகிரிசாமி குறிப்பிடுகிறார். உண்மையான சொற்கள் அவை.

25 ஆண்டுகளுக்கு முன்பாகக் கோவில்பட்டியில் காருகுறிச்சி அருணாசலம் அவர்களுக்கு ஒரு விழா நடைபெற்றது. அது எழுத்தாளர் கௌரிசங்கர் இயக்கிய காருகுறிச்சியார் பற்றிய ஆவணப்படத்தின் திரையிடல். அதில் நான் கலந்துகொண்டு பேசினேன். கௌரிசங்கர் உள்ளூர் வீடியோகிராபர் ஒருவர் துணையோடு காருகுறிச்சியாரோடு தொடர்பான இடங்கள், கலைஞர்கள், குடும்பத்தவர் எனப் பலரையும் படம்பிடித்தார். காருகுறிச்சியின் பழைய புகைப்படங்கள், செய்தித் தாளில் வெளியான தகவல்கள் என யாவையும் ஒன்றிணைத்து சிறப்பாக அந்த ஆவணப்படத்தை உருவாக்கியிருந்தார். ஆனால் அந்தப் படம் வேறு எங்கும் திரையிடப்படவேயில்லை. கௌரி சங்கரும் மறைந்துவிட்டார். அவரது கனவு பாதியில் முடிந்துபோனது.

காருகுறிச்சி அருணாசலம் அவர்களுக்கு அவரது சொந்த ஊரில் ஒரு சிலையிருக்கிறது. உள்ளூர் மக்கள் உருவாக்கிய சிலை அது. வளைந்து போன நாதஸ்வரம் உள்ள சிலை. ஒரு மகத்தான இசைக்கலைஞனுக்குக் கம்பீரமான சிலை தேவை. அதை அரசே உருவாக்கிக் காருகுறிச்சியில் வைக்க வேண்டும். காருகுறிச்சியார் நூற்றாண்டு விழாவை அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும். கோவில்பட்டியில் அவருக்கு ஒரு நினைவு மண்டபம் உருவாக்க வேண்டும்.

எனது ‘சஞ்சாரம்’ நாவலுக்குச் சாகித்ய அகாதமி விருது கிடைத்தபோது காருகுறிச்சியாரின் குடும்பத்தினர் மற்றும் நாதஸ்வர இசைக்கலைஞர்கள் திருநெல்வேலியில் பெரிய பாராட்டு விழா நடத்தினார்கள். அதில் காருகுறிச்சியாரின் துணைவியார் எனக்குப் பொன்னாடை போர்த்தி ஆசி கொடுத்தார். அது மிகப் பெரிய பேறு. அன்று நாதஸ்வரக் கலைஞர்கள் என்னைக் கௌரவிக்கும் விதமாக இசை நிகழ்ச்சி நடத்தினார்கள். இதுதான் எழுத்தில் எனக்குக் கிடைத்த பெரிய கௌரவம்.

தமிழ் மக்களின் அழியா நினைவில் காருகுறிச்சியாரும் அவரது சங்கீதமும் நிகரற்ற மகிழ்ச்சியின் அடையாளமாகவே நிலைகொண்டிருக்கிறார்கள்.

எழுத்தாக்கம்.
எஸ்.ராமகிருஷ்ணன்.
நவீன தமிழ் இலக்கியத்தின் மிக முக்கிய எழுத்தாளர்.

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சீர்காழி முத்துத்தாண்டவர்

புரந்தர தாஸர்