சீர்காழி முத்துத்தாண்டவர்
சீர்காழி முத்துத்தாண்டவர்
சீர்காழி முத்துத்தாண்டவர் வாழ்க்கை வரலாறு
தமிழ்நாட்டில் இன்றைய கீர்த்தனம் - கிருதி மரபுக்குத் தந்தை என்று சொல்லத்தக்கவர் சீர்காழி முத்துத்தாண்டவர். சிதம்பரம் நடராசப் பெருமாள் மீது அளவில்லாத கீர்த்தனங்களும் பதங்களும் பாடியவர். இவர் பாடல்களை இந்த இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலம் வரை சங்கீத வித்துவாள்கள் தங்கள் கச்சேரிகளில் நிரம்பப் பாடிவந்தார்கள். அக்காலத்தில் இவருடைய பதங்கள் அபிநயத்துக்கு மிகவும் சிறப்புடையனவாய்க் கருதப்பட்டன. தற்காலத்திலும் முத்துத்தாண்டவரின் பதங்கள் நாட்டிய நிகழ்ச்சிகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
முத்துத்தாண்டவர், சோழ நாட்டில் சீர்காழி என்ற சிவத்தலத்தில் பிறந்தார். இத்தலம் சைவ சமய ஆசாரியராகிய திருஞானசம்பந்தர் அவதாரம் செய்து அம்பிகையிடம் ஞானப்பாலுண்ட அற்புதம் பொருந்தியது. இங்கு, சுவாமி பெயர் திருத்தோணியப்பர். அம்பிகை - திருநிலைநாயகி. (யுக முடிவுக்காலத்தில் பெரு வெள்ளம் உண்டாகி அதில் உலகம் யாவும் மூழ்கியபோது, சிவபெருமான் இங்கு ஒரு தோணியில் உயிர்களை ஏற்றி மிதக்கச் செய்து காத்தமையால் இத்தலம் தோணிபுரம் என்றும், சுவாமி தோணியப்பர் என்றும் பெயர் பெற்றதாகப்புராணச் செய்திகள் கூறுகின்றன.) இத்தலத்தில் பாணர் குலத்தில், முத்துத்தாண்டவர் பிறந்தார். பழமையான 1852 இல் அச்சிடப்பட்ட முத்துத்தாண்டவர் கீர்த்தனப் பதிப்பில், இவருடைய காலம் 350 ஆண்டுகளுக்கு முன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி கணக்கிட்டால் இவர் பிறந்த காலம் 1500-ஐ ஒட்டியிருக்கலாம். எங்ஙனமாயினும் முத்துத்தாண்டவர் கி.பி 1600-க்கு முன் வாழ்ந்தவர் என்பது உறுதி (1525-1625).
பெற்றோர் இவருக்கு இட்ட பெயர் தாண்டவன் என்பதாகும். இளமையில் கடுமையான சூலை நோய் இவரைப் பிடித்தது. இருப்பினும் பரம்பரையாக வந்த சிவபக்தி முதிர்வால் இவர் நாள்தோறும் கோயிலுக்குச் சென்று, பிரமபுரமாகிய இத்தலத்துக்குரிய பிரமபுரீசரையும், திருநிலை நாயகியையும், திருந்தோணியப்பரையும் மிக்க பக்தியோடு வழிபட்டு வந்தார். வழிபாட்டுக் காலம் தவிர மற்ற நேரங்களில் இவர் திருமுறைகளை ஓதுவதிலும், ஆடலிலும், பாடலிலும் ஈடுபட்டு, சிவசிந்தை உடைவராகவே இருந்து வந்தார். பல நாட்களில் கோயிலுக்குச் செல்வதும் நெடுநேரம் அங்கேயே தங்கி விடுவதுமாக இருந்தார்.
இப்படி ஒரு சமயம், மாலை நேரத்தில் சென்று கோயிலின் எல்லாச் சந்நிதிகளையும் தரிசித்து வந்தபோது, இவருக்குப் பசி மிகுதியாகி, மிகுந்த சோர்வு ஏற்பட்டது. அதனால் மிக்க தளர்ச்சியோடு, வாகனங்களை வைத்திருக்குமிடத்திற்குச் சென்று சிறிது நேரம் படுத்தார். படுத்தவர் நன்கு உறங்கி விட்டார். நேரம் ஆயிற்று. கோயில் சந்நிதிகளெல்லாம் திருக்காப்பிடும் சமயம் வந்தது. இவர் இங்கிருந்தது ஒருவருக்கும் தெரியாது. அர்ச்சகரும் காவல்காரரும், கதவுகளையெல்லாம் சாத்திப் பூட்டிக் கொண்டு போய்விட்டார்கள்.
கொஞ்ச நேரமானபின் தாண்டவர் விழித்தார். எங்கும் இருண்டிருந்தது. வாகன அறை சும்மா சாத்தியிருந்தது. இவர் வெளியே வந்து பார்த்தால், எல்லாம் பூட்டப்பட்டிருந்தது. கோயிலை விட்டு வெளிப்பட்டுத் தம் வீட்டுக்குப் போக வழியில்லை. மனம் வருந்தித் தோணியப்பர் சந்நிதியை அடைந்தார். அங்கு நின்று பெருமானைத் தம் உள்ளம் உருகத் தியானித்தும், தம் நிலையைக் குறிப்பிட்டும் துதித்தார். தமக்கு இயல்பாய்த் தெரிந்திருந்த தேவாரத் திருமுறைகளையெல்லாம் பாடித் துதித்தார்,
அம்பிகை தரிசனம்
அப்போது இவருடைய முன் வினைப் பயனாலும், தமிழ்நாடு செய்ததவத்தாலும் ஒரு பேரற்புதம் நிகழ்ந்தது. சிவபெருமான் திருவுள்ளக் குறிப்பின்படி, உமா தேவியார் இவருடைய பசியையும் பிணியையும் ஒருங்கே போக்கத் திருவுள்ளங் கொண்டார்.
கோயில் பூசை செய்யும் பெரிய குருக்களுடைய பத்து வயதுப் பெண் குழந்தைபோல் வடிவெடுத்து, இவர் முன் தோன்றினார். கோயிலுக்குள் குருக்களின் மகள் வந்தது அவருக்கு இயல்பாக இருந்ததேயன்றி, அவர் மனத்தில் எந்தச் சிந்தனையும் எழவில்லை. பெண் குழந்தையான உமாதேவியார் கேட்டார் : "அப்பா! நீ ஏன்இப்படிப் பெரிதும் வருந்துகின்றாய் ?"
இவர் சொன்னார்: "தாயே! நான் என்னவென்று சொல்வேன். முற்பிறவியில் செய்த பாவத்தால் பெரிதும் துன்பப்படுகிறேன். என்னுடைய நோய் என்னைப் பெரிதும் வாட்டுகின்றது. அதுவன்றியும், எப்போதும் வறுமை. இப்போது மிக்க பசி. நான் எதைச் சொல்லி உனக்கு உணர்த்துவேன்” என்றார்.
“அப்பனே ! நீ இப்போது மிகுந்த பசியோடிருப்பதால் சிறிது அன்னம் கொடுக்கின்றேன். இதை உண்டு உன் பசி தணிவாயாக” என்று சொல்லி உமா தேவியார் ஒரு பொற்கிண்ணத்தில் அன்னம் கொடுத்தார்.
தாண்டவர் அதை வாங்கியுண்டு பசி தீர்ந்தவராய், மிகுந்த நன்றி கலந்த மகிழ்ச்சியுடன், “தாயே, இந்தப் பசிப்பிணியை இப்போது நீக்கியது போல என் உடற்பிணி நீங்கவும் ஏதேனும் சொல்வாய்" என்று வேண்டினார். இதைக் கேட்ட உமாதேவியார், “அப்பா, உன் பெயர் தாண்டவன் அல்லவா ? அதற்குப் பொருத்தமான, தில்லையில் தாண்டவமாடும் சபாநாதரைத் தரிசித்து, அவர் மீது பாட்டுப் பாடினால் இந்த நோய் நீங்கி குணமடைவாய். இப்போது புறப்பட்டுச் சிதம்பரம் செல்" என்றார்.
"தாயே, நான் அதிகம் கற்றவன் அல்லேன். எனக்குப் பாடத் தெரியாதே ? நான் எவ்வாறு பாடுவேன் ?” என்று இவர் கண்ணீர் விட்டார்.'
மீண்டும் அம்மையார், “அது பற்றி நீ வருந்தாதே.
சிதம்பரம் செல்.
கனகசபையில் நின்று தரிசிக்கும்போது, அங்குத் தரிசிக்கும் திருக்
கூட்டத்தாரிடையில் என்ன சொல் பிறக்கிறதோ அச்சொல்லை வைத்தே
பாடத்தொடங்கு சபாநாதர் கிருபையால் உனக்குப் பாடவரும் என்றார்.
இச்சொற்களைச் சொன்னவுடனே சிறுமியாக வந்திருந்த உமாதேவியார் ஒரு சோதியாக மறைந்துவிட்டார். பார்த்துக் கொண்டேயிருந்த தாண்டவர் மிக்க வியப்பும் துக்கமும் ஒருங்கே அடைந்தார். “என் கண்முன்னே வந்து இவ்வளவு நேரம் உரையாடிய என் தாயை நான் குருக்கள் குமாரி என்றே எண்ணிவிட்டேனே! வந்தவர் உலக நாயகியாகிய உமாதேவி என்று அறிந்துகொள்ள முடியாத பாவியானேனே! கதவுகளெல்லாம் பூட்டியபடி இருக்க இங்குச் சிறு பெண் எப்படி வரமுடியும் ? இதை நான் சிந்திக்க வில்லையே" என்றெல்லாம் சிறிது நேரம் பலவாறாகக் குழப்பமடைந்தார். பின்னர், "என் பசிப்பிணி போக்கிய உமாதேவியார் நினைத்தால் ஒரு கணத்தில் என் உடற் பிணியையும் நீக்கியிருக்கலாமே! ஏன் என்னைச் சிதம்பரம் போகும்படி கட்டளை இட வேண்டும் ? ஆயினும் இறைவியின் திருவுள்ளத்தை யார் அறிய முடியும் ? எனவே, நான் அம்மையார் கட்டளைப்படி நடப்பேன் ” என்று துணிவு கொண்டு, அதன் பின்னர் உறக்கம் கொள்ளாமல் அம்பிகை சந்நிதிக்கு வந்து அங்கேயே தோத்திரம் செய்தபடி நின்றுகொண்டிருந்தார்.
நேரம் ஆயிற்று பொழுதும் புலர்ந்தது. கோயில் காவலர், அர்ச்சகர் முதலியோர் முறைப்படி திருக்காப்பு நீக்கி உள்ளே வந்தார்கள். அம்பிகை சந்நிதியை அடைந்தபோது அங்கே இவர் கையில் பொற்கிண்ணத்தோடு நின்றிருப்பதைக் கண்டார்கள். கண்டபோது அவர்கள் உள்ளத்தில் சந்தேகம் எதுவும் எழவில்லை. ஏதோ தெய்வச்செயல் நிகழ்ந்திருக்கிறது என்பதை மட்டும் தெரிந்து கொண்டார்கள். அவரைச் சமீபத்தில் அழைத்து, “அப்பா, உன்னை எங்கும் தேடிக்கொண்டிருக்கிறார்களே ! நீ எப்படி இங்கு வந்தாய் ?” என்றுவினவினார்கள், அவர் மிக்க பணிவோடு, நடந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் விளக்கமாகக் கூறினார். கேட்டவர்கள் பெரிதும் அதிசயித்தார்கள். அவர் கையில் இருந்த பொற்கிண்ணம் அவர் கூறிய செய்தி உண்மை என்று நம்பர் காரணமாயிற்று அன்றியும், அவர் முகத்தில் முன்னில்லாத ஓர் அழகிய ஒளி முத்துப்போல் விளங்கியதையும் அவர்கள் கண்டார்கள். " அப்பா நீ இறைவியைத் தரிசித்து அவருடைய அருளைப் பெற்றவன். உன்னை இனி நாங்கள் வெறும் தாண்டவன் என்று சொல்லாமல் முத்துத்தாண்டவன் என்றே அழைப்போம்" என்று சொல்லி, அவ்வாறே அழைக்கத் தொடங்கினார்கள்,
சிதம்பர தரிசனம்
அப்பால், முத்துத்தாண்டவர் தம் இல்லம் அடைந்து நிகழ்ந்தவற்றை வீட்டிலுள்ளோரிடம் சொல்லிவிட்டுத் தில்லையை நோக்கிப் புறப்பட்டார். தில்லை அங்கிருந்து 12 மைல் தூரம். இடையில் மிகவும் அகலமான கொள்ளிட நதி. நடந்தே செல்ல வேண்டிய காலம். மெல்ல நடந்து கொள்ளிடத்தையும் கடந்து, தில்லைப் பதியின் எல்லையை அடைந்தார். அங்கேயே உடலின் அங்கங்கள் முழுவதும் தரையில் படும்படி பதிந்தெழுந்து, பின் நகரினுள் நுழைந்தார். கோபுரங்களைக் கண்டவுடனே மீண்டும். பதிந்தெழுந்து நான்கு வீதிகளையும் வலம் வந்தார். தில்லை மூவாயிரவர் வாசம் செய்யும் இல்லங்களையெல்லாம் பார்த்து வணங்கிக் கொண்டே சென்று, சிவகங்கையை அடைந்து அதில் முறைப்படி நீராடித் திருநீறணிந்து, நித்திய பூசனைகளை முடித்துக் கொண்டு, ஈர உடையோடு உட்சென்று, நடராசப்பெருமான் சந்நிதியில் கனகசபையின் முன் நின்று மீண்டும் பதிந்தெழுந்து துதி செய்தார். பக்தி மிகுதியால் மனமுருகிப் புளகாங்கிதம் அடைந்து ஆனந்தக் கண்ணீர் பெருக்கி, தேவாரத் திருவாசகப் பாடல்களை மனதால் சொல்லிக்கொண்டு, தலைக்குமேல் கூப்பிய கையினராய், பரவசப்பட்டு நின்றார். அவருடைய மனம், "கூட்டத்தில் யாரேனும் உச்சரிக்கும் ஒரு சொல்லைக் கொண்டு பாடத் தொடங்குவாயாக" என்று அம்பிகை தந்த உத்தரவை எண்ணிக்கொண்டேயிருந்தது.
அந்த நிலையில்,
நடராச மூர்த்தியின் திருவருளால், சந்நிதியில் வந்திருந்தவர்களுள் ஒருவர் 'பூலோக கயிலாசகிரி சிதம்பரம்' என்ற ஒரு தொடரைச் சொன்னார். அதைக் கேட்ட முத்துத் தாண்டவர், திருவருள் உந்த, அதையே பல்லவியாக வைத்துக்கொண்டு விரிவான தமது முதல் கீர்த்தனத்தைப் பாடித் துதித்தார். தாண்டவருக்குச் சிறப்பான குரல் வளம் அமைந்திருந்தது. அவர் பாணர் மரபினராகையால், பண்ணும் பாணியும் அவருக்கு இயல்பாகக் கைவந்திருந்தன. பவப்பிரியா இராகத்தில் சம்பை தாளத்தில் அமைந்துள்ள இந்தக் கீர்த்தனம், பல்லவியும் அனுபல்லவியும், மூன்று நீண்ட சரணங்களும் உடையது.
பல்லவி
பூலோக கயிலாச கிரி சிதம்பர மல்லால் புவனத்தில் வேறுமுண்டோ
அனுபல்லவி
சாலோக சாமீப சாரூப சாயுச்சிய சபைவாணர் ஆனந்தத் தாண்டவம் புரிவதால் பூலோக)
சரணம்
நாலுமக மேருவென்னும் நாலுகோபு ரநிலையும் நவரத்ன மணிகளால் ஒளிசித்ர மதில்களும்
மேலுலகை அளந்திடல்போல் உயர்ந் தேவெயில் விரித்தகம் பத்திரள்களும்
காலுலவும் ஆயிரக் கால்மணி மண்டபமும் கங்கையின் நிறைந்தசிவ கங்கையின் விலாசமும்
ஆலிலையில் மாலும் அய னாலும் அறியாதபேர் அம்பலமும் மேவுவோர்க் கற்புதம் புரிதலால்
பூலோக)
முத்துத்தாண்டவர் சிதம்பரத்துக்குப் புதியவரானதால் சிதம்பரத்தைப் பற்றித் தாம் கேட்டிருந்தவற்றையும், இப்போது நேரில் கண்ட செய்திகளான கோபுரம், மதில், தூண்கள், ஆயிரக்கால் மண்டபம், சிவகங்கை, பேரம்பலம், கொடிநிலை, அம்பிகை, கோயில் விமானங்கள், வீதிகள், சத்திரங்கள் முதலிய சிறப்புக்களையும் சரணங்களில் விரிவாகப் பாடுகிறார். இவ்வாறு நெடுநேரம் கண்டோர் அதிசயிக்கும்படியாகப் பாடிக்கொண்டே இவர் நின்றபோது, இவரது பக்திக்கும் பாடலுக்கும் சபாநாதர் மிகவும் திருவுளம் உவந்தருளினார். அக்கணமே இவரைப் பீடித்திருந்த நோய் நீங்கிவிட்டது. அன்றியும் பெருமான் - திருக்களிற்றுப்படி என்னும் பஞ்சாட்சரப்படியின் மேல் ஐந்து பொற்காசுகள் தோன்றச் செய்து, தினந்தோறும் அதை வந்து பெற்றுக் கொள்ளும்படி முத்துத்தாண்டவருக்குக் கட்டளையிட்டருளினார். தமக்கு நேரிட்டிருந்த உடற்பிணி தீரும்படி அருளிய ஆனந்த நடராசமூர்த்தியின் திருவருளை எண்ணியெண்ணி இவர் விம்மிதம் அடைந்து, பின் படியிலிருந்த பொன்னையும் எடுத்துக்கொண்டு மீண்டும் பலமுறை பதிந்து தோத்திரம் செய்து சீர்காழிக்கு மீண்டார்.
இவ்வரலாற்றிலுள்ள ஒரு நயம் உணரத்தக்கது. கோயிலில் இசைக் கருவிகள் வாசிக்கின்ற பாணர் மரபினருக்குப் பொருட்கவலையே இராதபடி சோழமன்னர் பண்டைக் காலத்தில் எல்லா மானியங்களையும் வழங்கி இருந்தனர். அவர்களுக்கு நெடுங்காலம் பின்னர் அதே பரம்பரையில் வந்து நடராசப் பெருமானைப் பாட முற்பட்ட முத்துத்தாண்டவருக்குப் பெருமானே பொற்காசு வழங்கிய செய்தி அறிந்து மகிழற்பாலது.
மறுநாளும் காலையில் முத்துத் தாண்டவர் சீர்காழியிலிருந்து சிதம்பரம் வந்து தரிசித்துப் பதிந்தபோது, கூடியிருந்ததோரிடையே “சேவிக்க வேண்டும்" என்றொரு குரல் எழுந்தது. அதையே தொடக்கமாக வைத்து இவர் ஒரு புதுக் கீர்த்தனம் பாடினார்.
(ஆபோகி இராகம் -ஆதி தாளம்)
பல்லவி
சேவிக்க வேண்டுமையா - சிதம்பரம் சேவிக்க வேண்டுமையா
அனுபல்லவி
சேவிக்க வேண்டும் சிதம்பரமூர்த்தியாம் தேவாதி தேவன் திருச்சந்நிதி கண்டு
சரணம்
காரானை மாமுகத்து ஐந்து கரத்தானை கற்பகராயனை முக்குறுணி யானைச்
சீரார் புலியூர்ப்பதி மேலை வாசல்வாழ்
தேவர் சிறைமீட்ட சேவற்கொடி யானை
(சேவிக்க)
பாடி முடித்துத் திருநீற்றுப் பிரசாதத்தையும் பொற்காசுப் பிரசாதத்தையும் பெற்றுக் கொண்டு சீர்காழி திரும்பி விட்டார். இந்தக் கீர்த்தனத்தில் நான்கு சரணங்களை அமைத்திருக்கிறார். அன்றியும், கற்பக விநாயகர், முக்குறுணி விநாயகர், புலியூர்ப்பதி, மேலை வாசலில் உள்ள சேவற்கொடியோன், சிவகங்கை, சிவகாமி அம்பிகை, திருமூலட்டானம், சிற்றம்பலம், பேரம்பலம், ஆனித்திருமஞ்சனம், மார்கழி தரிசனம் முதலான பல தலச் செய்திகளை இங்கே குறிப்பிடுகிறார். இவ்வாறு நாள்தோறும் வந்து இவர் தினம் ஒரு கீர்த்தனமாகப் பாடிய கீர்த்தனங்கள் பல நூறு ஆகும்.
ஒவ்வொன்றிலும் அரிய சமயச் செய்திகளையும் தலச்செய்திகளையும் புராணச் செய்திகளையும் தவறாமல் அமைத்துப் பாடியிருக்கிறார். பின்வரும் கீர்த்தனத்தில், “தன்னை அறிவதுவே உண்மையான
மெஞ்ஞானம்" என்ற சிறப்பான சைவ சித்தாந்த அத்துவிதக் கருத்தை
அழகாகச் சொல்கிறார்
(ஆபேரி இராகம்- ரூபக தாளம்)
பல்லவி
என்னை எனக்குத் தெரியச் சொல்வாய் -தில்லைப் பொன்னம்பலத் தரசே
(என்னை)
அனுபல்லவி
தன்னை யறியும் அறிவது நீ சற்றும் தப்ப ஒண்ணாதிப்போ சாமி சமயம்
சரணம்
பூதமும் நானல்ல பொறிபுலன் நானல்ல ஒதும் அநாதி ஒருநான்கும் நானல்ல போதக் கருவி புறம்பல்ல உள்ளல்ல வாதமும் நானல்ல வென்று மயங்கும்
(என்னை)
இதுபோல மற்றச் சரணங்களும். இங்கு மனவாசகம் கடந்தார் சைவ சித்தாந்த சாத்திரங்களுள் ஒன்றான உண்மை விளக்கத்துள் வேறாகா என்னை எனக்கறியக் காட்டீர் ? என்று கேட்கும் கருத்து பயின்று வருவது காணத்தக்கது. இவர் சாத்திரங்களை நன்கு ஓதியிருப்பார் - அல்லது திருவருளால் அவற்றை இவர் நன்கு உணர்ந்திருக்கவும் கூடும்.
ஆற்றுவெள்ளம்
இவ்வாறு பலநாள் நிகழ்ந்து வருங்காலத்தில், ஒருநாள் சீர்காழியில் இருந்து புறப்பட்டுத் தில்லையை நோக்கி நடந்து கொள்ளிடக் கரையை அடைந்தார். கொள்ளிடத்தில் ஓடிக்கொண்டிருந்த பெருவெள்ளம் இவர் இறங்கி அக்கரை வரமுடியாதபடி தடுத்துவிட்டது. அப்போது இவர் மிகவும் வருந்தி இரண்டு கீர்த்தனங்கள் பாடினார். முதலாவது "காணாமலிருந் தாலென் கலக்கம் தெளியாதே" என்ற பல்லவியுடையது (சகன்மோகினி
தெரிசனம் செய்வேனே - முத்தி கொடுக்கும் திருவம்பல வாணைனை
(தெரிசனம்)
என்ற பல்லவி உடைய கீர்த்தனம் பாடிக்கொண்டே வந்தார். கோயிலை அடைந்து கனக சபையுட் சென்று மலயமாருதத்தில் (ரூபகதாளம்) கண்டபின் கண்குளிர்ந்தேன் - ஜனனக் கடலைக் கரை கடந்தேன்
என்ற பல்லவியுடைய கீர்த்தனம் பாடினார். ஒருநாள் இவர் சபையில் நின்று யாரிடத்திலேனும் ஒரு சொல் பிறக்க வேண்டுமே என்று எண்ணி அதற்காகக் காத்திருந்தபோது, ஒருவரும் ஒரு சொல்லும் சொல்லவில்லை. இது சபாநாதர் அவரைச் சோதி அமைந்திருக்கக்கூடும். ஒரே அமைதியாக இருந்தது. அப்போது முத்துத்தாண்டவர், சூர்துங்கராகப் பண்ணில் (சூரியகாந்த இராகம்) மிச்ரசம்பை தாளத்தில், 'பேசாதே நெஞ்சமே" என்ற சொற்சுருங்கிய பல்லவியுடைய கீர்த்தனத்தைப் பாடினார்.
பல்லவி
பேசாதே நெஞ்சமே - பேசாதே
அனுபல்லவி
பேசாதே நெஞ்சமே
பேசியும் தான் என்னகண்டாய் ஈசர் புலியூரில் வளர்
நேசர் அநுபூதி யல்லால் (பேசாதே)
அரவு தீண்டுதல்
மற்றொரு நாள் அதிகாலையில் வந்துகொண்டிருந்தபோது இவரை வழியில் ஒரு நச்சுப்பாம்பு தீண்டிவிட்டது. இவர் தனியே எப்போதும் போவது வழக்கபாதலால் அருகில் துணைக்கு யாருமில்லை. ஆனால் இதன் பொருட்டு இவர் சிறிதும் பதறவில்லை. 'அம்பலத்தில் ஆடுகின்ற பெருமானே மருந்து" என மனத்தில் உறுதி கொண்டு தக்கேசிப் பண்ணில் ஒரு கீர்த்தனம் பாடினார். (காம்போதி இராகம் - ரூபக தாளம்).
பல்லவி
அருமருந்தொரு தனிமருந்திது அம்பலத்தே கண்டேனே
(அரு)
அனுபல்லவி
திருமருந்துடன் பாடும் மருந்து தில்லையம்பலத் தாடும் மருந்து இருவினைகள் அறுக்கும் மருந்து ஏழை யடியார்க் கிரங்கும் மருந்து
சரணம்
கொன்றைத் தும்பை யணிந்த மருந்து கோதை மீதிற் படர்ந்த மருந்து மன்றுளேநின் றாடும் மருந்து மாணிக்க வாசகர் கண்ட மருந்து (அரு)
பாடத்தொடங்கியவுடனேயே விஷம் இறங்க ஆரம்பித்தது. பாடல் முடிந்தவுடன் அவருக்கு எல்லா விடமும் நீங்கி எந்த அயர்ச்சியுமில்லாது முன்போலவே வலிமையோடு நடக்கலானார். இக் கீர்த்தனம் இன்றுகூட சபைகளில் பாடப்பெறுகின்ற அரிய கீர்த்தனம், முத்துத்தாண்டவருக்குப் பிற்காலத்தில், இது நாடெங்கும் மிகவும் பிரசித்தமாய் வழங்கிற்று. சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த வடலூர் இராமலிங்க சுவாமிகள் இறைவனே மருந்து என்ற கருத்தைப் புள்ளிருக்கு வேளூரில் இறைவன் திருநாமமாகிய வைத்தியநாதன் என்ற பெயரோடு பொருத்தி “"நல்ல மருந்திம் மருந்து - சுகம் நல்கும் வைத்தியநாத மருந்து" என்ற பல்லவியுடைய அரிய கீர்த்தனமாகப் பாடியிருப்பதை இசை ரசிகர்கள் எல்லோரும் அறிவார்கள்.
அகப் பாட்டுக்கள்
இவ்வாறு ஏராளமான கீர்த்தனங்களைப் பாடிப் பழகிய முத்துத் தாண்டவருடைய நெஞ்சம் அகத்துறையிலும் பாட எண்ணியது போலும், இவர் மாணிக்கவாசகர் பாடிய திருவாசகத்தில் மிக்க ஈடுபாடு கொண்டவர். அது காரணமாக இவர், சிறுமிகள் கூற்றாகவும், காதல் துறையிலும் பக்தியோடு அவர் பாடிய பாடல்களில் மிகவும்ஈடுபட்டிருக்கிறார். இதனால் இவர் தாமும் கீர்த்தனங்களைப் பக்தியோடு காதல் துறையில் அமைத்துப் பாடலாம் என்ற துணிவு கொண்டார். இவ்வாறு இவர் பாடிய கீர்த்தனைப் பாடல்கள் பதம் எனப் பெயர் பெறும். இவ்வாறு இவர் பாடிய பதங்கள் அனேகம். இவையும் கீர்த்தனங்களைப் போலவேபிரசித்தி பெற்றன. எடுத்துக்காட்டாகப் பின்வரும் பாடலைக் குறிப்பிடலாம். (தோடி இராகம் - ஆதிதாளம்),
பல்லவி
தெண்டனிட்டே னென்று சொல்வீர் - நடேசர்க்குதான் தெண்டனிட்டே னென்று சொல்வீர்
அனுபல்லவ
அண்டமெல்லாம் பரவும் கொண்டல்காள் குப்பிட்டேன்
ஆண்டவரெனும் தில்லைத் தாண்டவராயர் முன்போய்
சரணங்கள்
பொருந்தும் காதல் கொண்டு பொன்னிதழ்த் தேனுண்டு இருந்தோம் சொல்லவோ விண்டு ஏகாந்தம் தனிற் கண்டு
கண்டால் வரும்பேச்சு
கன்னி வயதில் ஏச்சு
பண்டு சொன்னதும் போச்சு
பார்வை அவன் மேலாச்சு
மன்னும் நாணம் போக்கி
மனத்தைத் தாள்மலர்க் காக்கி
சென்னிமேற் கரங்கள் தூக்கித்
தில்லைப் பதியை நோக்கி
(தெண்)
தெண்)
2.
(தெண்)
3.
(தெண்)
இந்தப் பதம் தாண்டவருக்குப் பின் மிக்க பிரசித்தி பெற்றிருந்தது.
"தெண்டனிட்டேனென்று சொல்லடி - சுவாமிக்கு நான் தெண்டனிட்டேனென்று சொல்லடி"
என்று பாடியிருக்கின்ற, பிரசித்தி பெற்ற இராமலிங்க சுவாமி கீர்த்தனத்தினால் நாம் நன்கறியலாம்.
முத்திப்பேறு
இவ்வாறாக முத்துத்தாண்டவர் நெடுநாள் கீர்த்தனங்களும் பதங்களும் பாடிக்கொண்டிருந்தார். இவர் சபாநாதரையன்றி வேறு யாரையும் பாடியதில்லை. எண்பது வயதுக்கு மேல் இவர் வாழ்ந்திருந்தார் என்பர். மாணிக்கவாசகரிடத்து இவருக்கு மிக்க ஈடுபாடு என்று குறிப்பிட்டோம். இவருடைய முடிவும் அவரைப் போலவே அமைத்தது. இறுதியில் ஒரு நாள் இவர் காலையில் நடராச தரிசனம் செய்தபோது மாணிக்கவாசகரையே நினைத்துப் பாடினார். அன்று ஆனிமாதம் மக நட்சத்திரம் மாணிக்கவாசகர் பேறு எனக்குத் தரவல்லாயோ என்று இவர் பாடினார். (கோகிலப்பிரியா இராகம்- ரூபகதாளம்).
பல்லவி
மாணிக்க வாசகர் பேறெனக்குத் தர வல்லாயோ அறியேன்
அனுபல்லவி
காணிக்கை யாகக் கொடுத்தேன் உனக்கென்னை
ஆணிப்பொன்னே தில்லை யம்பல வாணா
நடராசப் பெருமானுடைய பெரும் திருவிழா நாளாகிய திருவாதிரைத் திருநாளில் ஏற்றுகின்ற அளவில்லாத கற்பூரங்களெல்லாம் கரைந்து அகண்டத்திலே கலந்து விடுவது போல, தாமும் உடலோடு அவனுடைய திருச்சபையில் கரைந்து கலந்துகொள்ள வேண்டும் என்று பாடினார். அவருடைய வேண்டுகோளைச் செவிமடுத்த பெருமானுடைய திருவருளால் சிற்சபையில் ஒரு சோதி உண்டாயிற்று அந்தச் சோதியில் இவர் கலந்து தாம் விரும்பியபடி மாணிக்கவாசகர் பேற்றையும் பெற்று விதேக முக்தி அடைந்தார்.
கீர்த்தனங்கள்
இவரது கீர்த்தனங்களில், இரண்டொரு கீர்த்தனங்களுக்கு மட்டுமே நான்கு சரணங்கள். மற்றவற்றிற்கு மூன்றே பிற்காலத்தில் சரணங்கள் மூன்று அமைக்க வேண்டும் என்பதற்கு முத்துத் தாண்டவரே தோற்றுவாய் என்று கருதத் தோன்றுகிறது.
முத்துத்தாண்டவர் கீர்த்தனங்களில் ஒரு சிறப்புத் தன்மை, இவருடைய பல்லவிகள் சொற்செட்டாயிருப்பது. சொற்கள் குறைந்திருப்பதால் பாடகர் தம்முடைய கற்பனைத் திறனுக்கு ஏற்றபடி சுர விந்நியாசம் செய்வதற்கும், தக்க இடங்களில் சங்கதி அமைப்பதற்கும், நிரவல் செய்வதற்கும். இவை விரிவாய் இடம் கொடுக்கின்றன. இராகத்தில் விவரிக்க வேண்டிய இடங்கள் யாவை என்பதெல்லாம் இசைவாணருக்கே தெரியவரும். சாகித்தியம் அதற்கேற்றபடி அமைந்திருந்தால் அது சிறப்புடைய சாகித்தியம். அந்த இசையும் சிறப்படையும். இல்லையானால் இரண்டுமே சிறப்படைய மாட்டா.
சில எடுத்துக்காட்டுகளைத் தரலாம். முன்னமே சில கீர்த்தனங்கள் குறிப்பிட்டப்பட்டன. 'பேசாதே நெஞ்சமே-பேசாதே', 'நடிப்பவனே சிற்சபையில் நின்று நடிப்பவனே', 'மறவாதிரு நெஞ்சமே உனக்கிது - பிறவா மருந்தாமே', 'சிவனை மறவாதே நினை மனமே - ஒருக்காலும் சிவனை மறவாதே நினை 'மனமே', 'தேடித் திரியாதே நெஞ்சே-தேடித் திரியாதே', 'கண்டாயோ மனமே நடேசனைக் கண்டாயோ மனமே' என்பன சில எடுத்துக்காட்டுக்கள். பதங்களிலும் இவ்வாறு சொற்செட்டாயுள்ள பதங்கள் பல.
திருஞானசம்பந்தர் பலநூறு ஆண்டுகளுக்கு முன்னே,
திருத்தாளச்சதி என்றொரு பதிகம் பாடியுள்ளார். 'பந்தத்தால் வந்தெப்பால் – பயின்று நின்ற வும்பரப் - பாலே சேர்வாயேனோர் காண் - பயில்கண 'முனிவர்களும்' என்று தொடங்குவது அப்பதிகம். சம்பந்தர் பிறந்த - சீர்காழிப் பகுதியிலேயே பிறந்த முத்துத்தாண்டவர் நெடுங்காலம் சென்று அவரைப் பின்பற்றித் தம்முடைய கீர்த்தனங்களுள் சிலவற்றை அதேவிதமான தாள் அமைப்பிலேயே பாடி இருப்பது மிக்க சிறப்புடையது. இவர் பாணர் மரபினர் ஆதலால், பரத நாட்டியமும், நட்டுவத் தொழிலும் நன்கு தெரிந்திருந்தவராவார். சில கீர்த்தனங்கள் தாளக் கீர்த்தனங்கள். தாளக் கீர்த்தனம் என்றே பதிப்பிக்கப் பெற்றுள்ளன. அவற்றுள் ஒன்று பின்வருவது. (சாருகேசி இராகம் மிச்ர ஜம்பை தாளம்)
பல்லவி
ஆடிய வேடிக்கை பாரீர் -ஐயர் ஆடிய வேடிக்கை பாரீர்
அனுபல்லவி
தேடிய மாலயன் காணாத பாதர். தில்லை மூவாயிரவர் கண்ட அதீதர் தாள்தொழு வார்க்கருள் நல்கும் பிரக்யாதர் தம்பரமான சிதம்பர நாதர் (ஆடிய)
(ஆடிய)
சரணம்
தாகு சேகிணஞ் சேகிணங்கிட ததிங்கத்தோம் திரிகிட ததிங்கத் தோம் திரிகிட ததிங்கத்தோம் தாகு சேகிணஞ் சேகிணங்கிட ததிங்கத்தோம் திரிகிட ததிங்கத் தோம் திரிகிட ததிங்கத்தோம் கிடத ததிங்கத் தோம் கிடத தத்திமி தித்திமி தெய் தெய் ததிங்கத்தோம் கிடத தத்திமி தெய் தெய் தாம் தகுந்தரி தரிகு திரிகுகு தரிகுஜெம்தரி தாம் தகுந்தரி தரிகு திரிகுகு தரிகுஜெம்தரி தந்த திந்தம் தந்தணம் தணம்திமி
தந்த திந்தம் தந்தணம் தணம்திமி தந்த திந்திமி ததிக்கிடந் திக்கிடத்தக தந்த திந்திமி ததிக்கிடந் திக்கிடத்தக தத்த திங்கிணத் தோம் ததிங்கிணத்தோம் ததிங்கிணத்தோமென
தத்தடிங்கு தடிங்கு டிங்குகு
த்தணத ஜெணுத ததணத ஜெணுத
இதன்பின் இதில் மூன்று சரணங்கள் உள்ளன. இரண்டாவது சரணத்தின் தொடக்கம் பின்வருமாறு:
விரித்த செஞ்சடையாட விளங்கு குண்டலமாட
மென்கை மான் மழுவாட மேனியிற் பொடியாடத்
தரித்த வெம் புலிபாம்பு மருங்கி லிசைத் தடத் தண்டை கிண் கிணியிரு தாளில் அசைந்தாட
இவ்வரிகளின்பின், அனுபல்லவியின் பின்னர் அமைந்துள்ள தாளச்சதியை அப்படியே எடுத்தமைத்திருக்கிறார். இங்கு பட்டுமல்ல. மூன்று சரணங்களிலும் அப்படியே. இவற்றைப் பார்க்கும்போது இவர் இந்தக் கீர்த்தனத்தை அபிநயம், நாட்டியம் இரண்டும் ஒருங்கிணைந்த நடனத்துக்காகவே பாடியிருக்கிறார் என்று தெரிகிறது.
மற்ற இரண்டு கீர்த்தனங்களும் (ஷட்விதமார்க்கனி - ரூபகம்) “நடிப்பவனே சிற்சபையில் நின்று - நடிப்பவளே' என்பதும், (அமிர்தவாகினி மிச்ர சம்பை தாளம்) 'நிருத்தம் செய்தாரே - அய்யர், சதாளந்த நிருத்தஞ் செய்தாரே' என்பதும் ஆகும். முன்காட்டிய ஆடிய வேடிக்கை' என்பதில் மட்டும் அனுபல்லவியிலும் மூன்று சரணங்களிலும் ஒரே தாளச்சதி அமைத்திருக்கிறார். மற்ற இரண்டிலும் சரணந்தோறும் தாளச்சதியை மாற்றியிருக்கிறார். தாளச் சதிக்குப் பொருத்தமான மூன்று கீர்த்தனங்களும், நிருத்தம் செய்வதையே குறிப்பிட்டுப் பாடுவது சொல்லத்தக்கது.
மூவடுக்கொலிக் கீர்த்தனம் (பகுதாரி - ஆதிதாளம்) என்பதன்
பல்லவி:
ஆனந்தத் தாண்டவ மாடினார் - தில்லை
அம்பலவாணனார் (ஆனந்த)
இதன் சரணம் ஒவ்வொன்றிலும் மூன்று
வகையான அடுக்கொலிகளை அமைத்துப் பாடியிருக்கிறார். அடுக்கொலிகள் பின்வருமாறு உள்ளன:
பாதச் சிலம்பு - கலீர் - கலீர் - கலீரெனப் பைம்பொற் குழைகள் பளீர் - பளீர் - பளிரென வேதப்புராணத் தத்தெய் –தத்தெய்யென றுரித்துத் திண் - புரத்தைப்புன்
விரித்துச் செஞ் - சடைக்குப் பெண் தரித்துக்குஞ் – சரத்தைக்கொன்
சிரிப்பிற் சங் - கரித்து நின்று (ஆனந்த)
இங்கு மூன்று ஒலிகள் - ஆனந்தத் தாண்டவம், பாதச் சிலம்பு, கலீர் விரித்துச் செஞ்சடை என்று மூன்று வகைப்பட்ட ஒலிகள் ஒலிப்பதைக்காணலாம். இவ்வாறெல்லாம் தாளக் கீர்த்தனம் அமைக்கும் மரபு அக்காலத்தில் இருந்தது போலும் அம்மரபுகள் இன்று மறைந்துபோய் விட்டன. 'விரித்துச் செஞ்சடை' என்று வரும் பகுதி பிற்காலத்தில் முடுகியல் சந்தம் எனப்படுவது கலீர் - கலீர் - கலீர் என்பது முதலாக வரும் அடுக்கொலிகளை, இவர் அருணகிரிநாதருடைய திருப்புகழைப் பயின்று அமைத்திருக்கிறார் என்று அறியலாம்.
நீண்ட சரணங்கள் உடைய கீர்த்தனங்கள் மட்டும் அன்றி, சுருங்கிய சொற்களையுடைய கீர்த்தனங்களையும் இவர் பாட வல்லவர். இதற்குப் பின்வரும் கீர்த்தனம் எடுத்துக்காட்டு (தேனுகா இராகம் - ரூபக தாளம்).
பல்லவி
தெரிசனமே நினைமனமே - சபாநாதர் தெரிசனமே நினை மனமே
(தெரி)
அனுபல்லவி
தெரிசனமே முத்தி பரிசனமே - நித்திய வரிசை நடம்புரி மாசபை வாணர் (தெரி)
சரணம்
கஞ்சமலருதயன் -- கஞ்ச வனிதைபதி கஞ்சநயனன் - பணி - கஞ்சமலர்த்தாள் ஆகமத்துட் பொரு - ளாக நிறைந்தசு தாகர மகிமைகொள் - ஆகாசலிங்கர் கனகாம்பாதர -- கனகசடாதர
கனக்கபாகர - கனகசபேசர் (தெரி)
இதற்கு முந்திய கீர்த்தனம் ஒன்றில் இவர் இவ்வாறே சுருக்கமான எழுத்துக்களை உடைய ஏழு சரணங்களை அமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. பாடல்களில் காணப்படும் சந்தம், முடுகு, அடுக்கு எனப்படுவன இவர் தமிழ்ப் பயிற்சி மிக்கவர் என்பதை உணர்த்தும்,
முன்னே குறிப்பிட்ட கீர்த்தனங்கள் அன்றி, இன்றுங்கூட
இசைவாணர் பாடி வருகின்ற ஒரு கீர்த்தனம் 'தெரிசித்த அளவில்' என்பது
(லதாங்கி இராகம் - மிச்ர ஜம்பை தாளம்).
தெரிசித்த அளவில் முத்தி பெறலாம் - புலியூனைத் தெரிசித்த அளவில் முத்தி பெறலாம்.
என்பது அக்கீர்த்தனத்தின் பல்லவி. ஒரு கீர்த்தனத்தில் 'மாய வித்தை செய்கிறானே அம்பலவாணன் - மாயவித்தை செய்கிறானே' என்ற பல்லவியோடு தொடங்கி இறைவனுடைய சிறப்பியல்புகளையும் லீலைகளையும் நயமாக எடுத்துச் சொல்கிறார். 'ஆட்டிடை அம்பலத்தில் அஞ்சு ஆடு மேய்க்கிறான் என்றெல்லாம் பேசுகிறார். 'அஞ்சாடு மேய்த்தல் என்பது மேய்ப்பார் இல்லாமல் வெறித்துத் திரியும் பாற்பசு' என்று திருமூலர் குறிப்பிட்டது. இங்கு ஆடு - புலன். முதலில் ஆட்டிடை என்ற இடத்து ஆடு ஆடுகின்ற ஆட்டம் அல்லது சபை, இவ்வாறு 'மாயவித்தை செய்கிறான்' என்று இவர் குறிப்பிட்ட தொடர்கள் இதே கருத்தை வைத்துப் பிற்கால இசைவாணர்கள் இன்றுவரை பாலகிருஷ்ணனைக் குறிப்பிட்டு எண்ணற்ற கீர்த்தனங்கள் இயற்றுவதற்கு இடமாக அமைந்தன.
தம் கீர்த்தனங்களில் இவர் ஒவ்வொரு சாணத்திலும் வழி
எதுகைகள் பல அமைக்கிறார். இவையெல்லாம் பிற்கால சாகித்திய கர்த்தாக்களுக்குச் சிறந்த வழிகாட்டியாக அமைந்தன.
நடராசப்பொருமானைக் குறிப்பிடும்போது தாண்டவன்,
தாண்டவராயன் என்றெல்லாம் இவர் பல இடங்களில் சொல்கிறார். இத்தொடர்களால் இவர் தம்மைக் குறிப்பிட்டுக் கொண்டார் என்று சிலர் கருதுவர். அது பொருத்தமில்லை. மற்றவர்கள் போல இவர் தம் பெயரை இறுதிச் சரணத்தில் மகுடமாக வைத்துப் பாடவில்லை. பாடல்கள் யாவுமே நடராச தாண்டவத்தைப் பற்றியன. ஆதலால் தாண்டவன் என்ற சொல்லால் மட்டும் இவர் தம்மைக் குறிப்பிட்டுக்கொண்டார் என்று கருத அவசியமில்லை.
பதங்கள்
இவர் பாடிய பதங்களில் நமக்குக் கிடைத்திருப்பவை 25 மட்டுமே இவருடைய பதங்கள், தொடக்க காலம் முதலே கீர்த்தனங்களோடு சேர்த்துப் பதம் என்று பிரித்துத் தனியே எண்ணிட்டு அச்சிடப்பட்டு வந்துள்ளன.தமிழில் முதன்முதல் பதம் பாடியவர் இவரே என்பதில் கருத்து வேற்றுமையில்லை. பதம் என்பது அகப்பாட்டு அதாவது நடராசப் பெருமான் மீது காதல் துறையில் அமைந்த கீர்த்தனம். இவருடைய பதங்கள், தலைவி நேரே பேசுவதாகவும், தோழி தலைவியைப் பார்த்துச் சொல்வதாகவும், தலைவி தோழியிடம் பேசுவதாகவும், ஏசலாகவும் அமைந்துள்ளன. மூன்றாவது பதத்தில் “பொற்படியே கொடுத்து எப்படியாகிலும் அப்படி இப்படி செய்ததற்கு ஒப்பினேன்" என்று அமைத்திருப்பது இவருக்கு நடராசப் பெருமான் திருப்படியில் பொற்காசு கொடுத்தார் என்ற வரலாற்றுச் செய்தியை நினைவூட்டுகிறது. இதன் சரணங்கள் மூன்றிலும் ஒவ்வொரு தொடரையும் எதுகையில் அமைத்திருக்கிறார். பின்வருவது எடுத்துக்காட்டு:
மேடையிலே - மலர் சூடையிலே - விளை
யாடையிலே - புறவாடையிலே - நீ
ராடையிலே - என்னைக் கூடையிலே - முத்
தாடையிலே கை - போடையிலே - நீர்
(அப்படி)
ஏசல் பதம் என்பது சௌராஷ்டிர இராகத்தில் ஏகதாளத்தில் அமைந்துள்ளது. 4 கண்ணிகள் உடையது. இது கீர்த்தன வடிவத்தில் அமையாமல் 4 கண்ணிகளாக மட்டும் அச்சிடப்பட்டுள்ளது. பின்வருவது இதன் முதல் கண்ணி ஒவ்வொரு கண்ணியின் முதல் பகுதி, மகள் தாயை வினாவுவது போலவும், பிற்பகுதி மகளுக்குத் தாய் விடை கூறுவது போலவும் அமைந்துள்ளது.
மகள் வினா:
திருமுத்துப் பந்தரின் கீழ் கருதிப் பங்கயன் முதலோர் இருபக்கமும் தொழவே வரும் - இவரார் சொல் அன்னே!
தாய் விடை:
ஒருபத்தன் செயுந் தவத்தைக் வருகிற பேரம்பல
கருதி நிருத் தங்காட்ட
வாணர் காண் மின்னே.
பிற பதங்களைப் பற்றி சில வார்த்தைகள் சொல்லலாம்!
வருவார் வருவாரென்றென் - மனத்தைத் தேற்றுவரல்லால்
வந்தா ரென்பாரைக் காண்கிலேன்
என்ற பதம் நூலின் முதல் பதமாக உள்ளது. சிறப்பான ஒரு பரத நாட்டியப் பதம், பலரும் நன்கு அறிந்து சுவைத்தது. இதைவிடச் சிறப்பாக நன்கு நடிக்கப்பட்ட பதம் "தெருவில் வாரானோ - என்னைச் சற்றே - திரும்பிப்பாரானோ" என்ற பதம். 'தெண்டன் இட்டேன்' என்ற பதத்தை முன்னமே விரிவாய்ச் சொல்லியிருக்கிறோம். மற்றொன்று:
நினைத்துக் கொண்டாற் - சகிக்கப்போமோ
தனக்குத்தானே
நிகராகிய சாமி - செய்வித்தையை.
இதை அப்படியே அடியொற்றி, கி.பி. 1785 - இல் தொட்டிக்கலை சுப்பிரமணிய முனிவர் என்ற சிறந்த தமிழ்ப் புலவர் தமது குருவாகிய சிவஞானகவாமிகள் முத்தியடைந்தபோது "நினைந்தாற் சகிப்போமோ-என் சுவாமியை" என்று ஒரு கீர்த்தனம் பாடியிருப்பது இங்கு அறியத்தக்கது.
நிறைவாக இவர் பாடிய பதத்தின் பல்லவியும் மூன்றாவது சரணமும் பின்வருமாறு:
பல்லவி
மனமுருகுது, விழிபுனல் பூணுது மையல் பெருகுது மதியனல் மூளுது வருமுரு விலிசர மெனைத் தீண்டுது வகையென்ன செய்வேன்.
சரணம்
தசம்பவி - தகுணகுணந்தகு தகுதிந்திமி திமியென நின்றொரு சவதம் பெறத்திரு நடனம் புரி தருசங்கரனே
நவசந்திர நுதல்வேல் விழிதரு நவசிந்தை யிலுருகி யிதம்பெற நவபஞ்சணை யதனின் மகிழ்ந்தெனை நண்பிலணைந்தாள்
சிவசங் கரதிரி சூலாதர
திரியம் பக திரி லோகநாயக திரிபுண் டர ஹர மகாதேவ தேவராய மூர்த்தி
(மன)
(பன)
முத்துத்தாண்டவரின் கீர்த்தனங்களும் பதங்களும் நிறையவுண்டு இவருடைய பாடல்களை நன்கு தோய்ந்து பாடக்கூடிய இசைவாணர்கள் இக் கிருதிகளில் மேலும் எத்தனையோ இசைச் செய்திகளை இசைச் சுரங்கம் போலத் தோண்டி எடுத்துக் கொண்டே இருக்க முடியும்.
இறையுணர்வு
இயற்றமிழ் இலக்கணங்களிலும் சிறந்து விளங்கிய முத்துத் தாண்டவர் நிறைய பதங்களையும் இயற்றியுள்ளார். ஆனால் இசைத் தமிழிலும் இவர் வல்லவர். மேலே குறிப்பிட்டுள்ள எண்ணற்ற செய்திகளால் இது நன்கு விளங்கும். இசைப்பாடல்கள் யாவும் நடராசப் பெருமானுக்கென்றே எழுந்தவை. நடனத்துக்காக இவர் பாடிய பாடல்களும் நடராசப் பெருமானுக்கே அர்ப்பணமானவை. எல்லாவற்றையும் ஆட்டுவித்துத் தாமும் ஆடுகின்ற இப்பெருமானுக்கன்றி வேறு யாருக்கு இப்பாடல்கள் உரியனவாக இருக்க முடியும்? தாண்டவர் நன்கு தமிழ் பயின்றவர். சாத்திரங்களையும்,தோத்திரங்களையும் நன்கு பயின்றவர் என்பதை முன்பு சில இடங்களில் எடுத்துக் காட்டினோம். இவர் மேலான அத்வைதக் கருத்தையும் நன்கு உணர்ந்தவர். இறைவனையே பிறவிப் பிணிக்கு மருந்தாகவும் உடற்பிணிக்கு மருந்தாகவும் கருதியவர். மாணிக்கவாசகரிடத்து மிக்க ஈடுபாடு கொண்டவர். பிற்காலத்தில் இவர் பாடல்களைத் தழுவி இராமலிங்க சுவாமிகள் தொட்டிக்கலை - சுப்பிரமணிய முனிவர் போன்றோர் இசைப் பாடல்கள் பாடினார்கள்,
இவருடைய கீர்த்தனங்களில் சொல் நயம், பொருள் நயம், அணி நயம், தொடை நயம், இசை நயம், தாள நயம், சொற்செட்டு முதலியவை நிரம்ப அமைந்திருக்கக் காணலாம். இவ்வியல்பு, இசைவாணர்களின் கற்பனைக்கு விரிவான இடங்கொடுக்கிறது. பதங்கள், ஏசல் முதலியவற்றை இவரே முதன்முதல் பாடுகிறார். திருஞானசம்பந்தரை அடியொற்றித் திருத்தாளச்சதி, திருவிராகம் முதலியன அமைத்துப் பாடியிருக்கிறார். புராணக்கதைகளும் தமிழ் மொழியில் இவருக்கு எளிதாகக் கைவருகின்றன. இந்த இயல்புகள் எல்லாம், ஒன்றாய்க் காணும்போது, இவர் இசைத்தமிழுக்கே பிற்காலத்தில் எழுந்த ஒரு மார்க்கதரிசியாகிய சிறந்த சாகித்தியகர்த்தா என்பதும், 'கர்நாடக சங்கீதத்தின் ஆதி மும்மூர்த்திகள்' என்று சொல்லுகின்ற மரபில், முதல் மூர்த்தியாவார் என்பதும் நன்கு விளங்கித் தோன்றுகின்றன.
முத்துத்தாண்டவர் அமைத்துக் கொடுத்த மரபு விரிவாக வளர்ந்தது. பிறர் வடமொழியில் இலக்கணம் செய்து தந்திருக்கலாம். ஆனால் கர்நாடக சங்கீத இலக்கியம் செய்தோர் மரபில் இவரே முன்வைத்து எண்ணப்படுவார். இசையும், நடனமும் பரம்பொருளுக்கே உரியன என்ற ஒரு பெருங் கொள்கையை இவரைப் போல எடுத்துக் காட்டியவர் வேறு எவரும் இலர். இவருக்கு முந்திய காலத்தில் நாககர இசையையும் நாட்டியக்கலையையும் இறைவனுக்கே அர்ப்பணம் செய்தது போலேவே, அதே பாணர் மரபில் வந்த இவர் முன்னமே சீர்காழியில் தோன்றிய திருஞானசம்பந்தர் போல, வாய்ப்பாட்டு இசையையும் அபிநயக் கலையையும் நடராசப் பெருமானுக்கு அர்ப்பணம் செய்தது பெருஞ்சிறப்பு.
முத்துத் தாண்டவர் பரம்பரை
முத்துத் தாண்டவர் நல்ல பாணர் மரபில் பிறந்து தில்லை நடராசப்பெருமானுக்கே தம்முடைய கீர்த்தனங்களையும், பதங்களையும் அர்ப்பணித்து, அப்பெருமானோடு இரண்டறக் கலந்துவிட்டார். தம்முடைய இசையைப் பரப்புவதற்காகப் பல சீடர்கள் கொண்ட ஓர் இசைப் பரம்பரையை இவர் தோற்றுவிக்காதது இசைத் தமிழுக்குப் பெருங்குறை. சோழ அரசர்கள் பாணர்களுக்கு எல்லாக் கோயில்களிலும் நிபந்தங்கள் அளித்திருந்தமையால், பிற பாணர்கள் இவருக்கு உணவும் உடையும் உறையுளும் தந்து ஆதரிப்பது மிக்க எளிதாய் இருந்தது. பெருமான் சந்நிதியில் மட்டுமே பாடினமையால் இவருக்கென்று ஒரு சீடர் குழாம் சேரவில்லை
இருப்பினும், இவருடைய கீர்த்தனங்கள் அடியோடு மறைந்து விடவில்லை. இவர் பாடியவை பல நூறு கீர்த்தனங்கள். அவற்றுள் இன்று 85 கீர்த்தனங்கள் கிடைப்பது தமிழ்நாட்டுக்கே பெரிய பேறாகும். இவற்றைத் தொகுத்து முறைப்படுத்தி வைத்தவர் இவருடைய குடும்பத்தில் இருந்து இவரோடு பழகி வந்த குப்பையாப் பிள்ளை என்பவர். இவர் முத்துத் தாண்டவர் காலத்துக்குப் பின்னர், சிதம்பரத்திலேயே தங்கி அவருடைய இசைப் பாடல்களை அருமையாகப் பாடிக் கொண்டு வந்தார். இவ்வாறு இவர் தொகுத்து வைத்திருந்த பதங்களும் கீர்த்தனங்களும் நிறைய இசைவாணர்களால் பாடப்பட்டு வந்தன. இவருடைய இசைத்திறன் காரணமாகவும், அழகான செய்யுளியற்றும் புலமை காரணமாகவும் இவர் சிதம்பரம் அமிர்தகவி குப்பையாப்பிள்ளை என்று வழங்கப்பெற்றார். இவர் தொகுத்த முத்துத்தாண்டவர் கீர்த்தனங்கள், பதங்கள் இத்தனை இருந்த போதிலும், இவர் செய்த கிருதிகளில் ஒன்றுதான் நமக்குக் கிடைக்கிறது. இது சீகாமரப் பண்ணில் (நாதநாமக்கிரியை இராகத்தில்), ஆதிதாளத்தில் அமைந்து பின்வரும் பல்லவியைக் கொண்டது:
தரிசிக்க வேண்டும் - கனகசபை தரிசிக்க வேண்டும்.
அனுபல்லவியையும் நீண்ட மூன்று சரணங்களையும் உடையது. நடராசருடைய சிற்சபையும் கனகசபையும், அதில் அமைந்த தூண், உத்தரம், கைம்மரம், ஆணி, வரிச்சு, வாசல், ஒடு முதலிய யாவும் மனித சரீரத்தில் அமைந்த எல்லா உறுப்புக்களும் என்று சொல்வது ஒரு சைவ மரபு இந்த மரபை அப்படியே அமைத்து முதல் சரணம் பாடியிருக்கிறார். இரண்டாவது சரணத்தில் நடராசப் பெருமானை உச்சி முதல் பாதம் வரை வருணித்து அவரைக் கண்டு அன்பு கூடு மனமே - சுண்டு தரிசிக்க வேண்டும் என்று அமைக்கிறார். மூன்றாவது சரணத்தில் பெருமான் யாருக்கெல்லாம் அருள் செய்தார் என்பதை முறையாகச் சொல்கிறார். இரணியவன்மன், உபமன்யு, மன்மதன் என்று சொல்லிய பின்னர் "முத்துத்தாண்டவன் சரசமான கவிக்குத் தருபதம் கொடுத்தோனே” என்று முத்துத்தாண்டவரைக் குறித்துப் பாடுகிறார். அதனோடு இதன் தொடர்ச்சியாக, ““செஞ்சொல் அமிர்தகவி துதிசெய் பையரவணிந்தோனே" என்று தம்முடைய பெயரையும் மகுடமாக வைத்து இதிலேயே பாடியிருக்கிறார்.
இந்த குப்பையாப் பிள்ளையின் பரம்பரையினர் பிற்காலத்தில் திருப்பாம்புரத்தில் சென்று தங்கி, அங்கு தங்கள் பரம்பரையை வளர்த்தார்கள் என்று தெரிகிறது. இவருடைய பரம்பரையில் வந்த ஒருவர் சேஷூ ப் பிள்ளை என்பவர். அவர் புதல்வர் குழந்தைவேல் பிள்ளை. அவர் புதல்வர் சாமிநாதப்பிள்ளை. அவருக்குப் பின் வந்தவர் - முதன்முதல் இரண்டு சகோதரர்கள் சேர்ந்து இரட்டை நாகசுரம் வாசிக்கும் முறையை அறிமுகப்படுத்திய திருப்பாம்புரம் நடராசசுந்தரம் பிள்ளை மற்றும் சிவசுப்பிரமணியப் பிள்ளை, நடராசசுந்தரம் பிள்ளையின் புதல்வர்கள் மூவர். முதலாமவர், பிரசித்தி பெற்ற புல்லாங்குழல் வித்துவான் சங்கீத கலாநிதி திருப்பாம்புரம் சுவாமிநாதப் பிள்ளை. இரண்டாமவர், பிரசித்தி பெற்ற நாககர வித்வான் களைலமாமணி திருப்பாம்புரம் சோமசுந்தரம் பிள்ளை. இவர் குருகுல முறையில் பயிற்றுவிக்கப்பட்டு வந்த நாகசுரக் கலையை இசை நிறுவனம் மூலம் பயிற்றுவிக்கும் முயற்சியில் - முதன்முதலில் சுவாமிமலையில் நாககர இசைப் பள்ளியைத் தோற்றுவித்ததுடன், பின்னர் பழனி தேவஸ்தானத்து நாககரக் கல்லூரியையும் தோற்றுவித்து அதன் முதல்வராய் இருந்தவர். மூன்றாமவர், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் இசைத்துறைத் தலைவராக இருந்து, அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் இசை நூல்கள் வெளியீடு அனைத்திற்கும் சுர தாளக் குறிப்புக்கள் எழுதிய கலைமாமணி திருப்பாம்புரம் சிவகப்பிரமணிய பிள்ளை. இந்த வழியில் முத்துத்தாண்டவரின் இசைமரபு வளர்ந்திருக்கிறதென்பது தெரிகிறது.
முத்துசாமி தீட்சிதரின் நேர் மாணாக்கர், கூறைநாடு பரதம் இராமசாமிப்பிள்ளை. அவருடைய பிள்ளை, பிரசித்தி பெற்ற கூறைநாடு நடேசன் இவரிடம் படித்தவர் திருப்பாம்புரம் நடராசசுந்தரம் பிள்ளை. இங்ஙனம் இப்பரம்பரையினர் முத்துசாமி தீட்சிதருக்கும் பரம்பரைச் சீடர்களாக ஆனார்கள். இதனால்தான், முன்னே கூறியவாறு தீட்சிதருடைய கிருதிகள் இக்குடும்பத்தாரால் பாதுகாத்து வைக்கப்பெற்று பின்னால் இசையுலகுக்குப் பயன்படுமாறு வெளிவந்தன.
ஆதார நூலுக்கும் ஐயா கலைமாமணி இசைப்பேரறிஞர் முனைவர் திருப்பாம்புரம் சோ , சண்முகசுந்தரம் அவா்களுக்கும் கோடான கோடி நன்றிகள்
கலைமாமணி இசைப்பேரறிஞர் முனைவர் திருப்பாம்புரம் சோ , சண்முகசுந்தரம் , திருப்பாம்புரம் இசை மரபின் ஒன்பதாவது தலைமுறையில் தோன்றியவர் . நல்ல குரல் வளமும் , உச்சரிப்பும் , இசைச்செறிவும் , இசை நுட்பமும் , லய ஞானமும் , மரபு வழுவாத இசை நெறியும் கொண்ட அரங்கிசை நிகழ்ச்சியாளர் , வானொலி மற்றும் தொலைக்காட்சி நிலையங்களில் முதன்மைக் கலைஞர் . பல்வேறு வெளிநாடுகளுக்குச் சென்று இசையரங்குகள் நிகழ்த்திப் புகழ் பெற்றவர் . தமிழிசையைப் பரப்புவதையே வாழ்நாள் நெறியாகக் கொண்டு தமது வாழ்நாளை இசைப் பணிக்கே அர்ப்பணித்து வருபவர் . சீர்காழி மூவர் விழாவை ஆண்டுதோறும் நடத்தி வருபவர் . இசைப் பேராசிரியர் - அரசு இசைக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் - தமிழ் இசைக் கல்லூரியின் இயக்குநர் - தமிழிசைச் சங்க பண்ணாராய்ச்சிக் குழு ஒருங்கிணைப்பாளர் - தமிழ் இசையியல் புலமையாளர் - இசை நூலாசிரியர் - பாடலாசிரியர் - சிறந்த சொற்பொழிவாளர் - ஆராய்ச்சி நெறியாளர் தேர்வு நிபுணர் குழு உறுப்பினர் - தேர்வு வினாத்தாட்கள் தயாரிப்பாளர் தேர்வு மதிப்பீட்டாளர் பாடத்திட்டக் குழு உறுப்பினர் - பயிற்சிப் பட்டறைகளும் ஆய்வரங்கங்களும் நடத்துபவர் - சமூகப் பணிகள் செய்வதில் ஆர்வம் மிக்கவர் - மதுரை , கோவை , திருவையாறு ஆகிய ஊர்களில் இசைக் கல்லூரிகளும் , மாவட்டங்களில் இசைப் பள்ளிகளும் அரசு துவக்குவதற்கு முழு முயற்சி மேற்கொண்டவர் - ஆளுமைத் திறன் மிக்கவர் எனப் பல்வேறு கோணங்களில் இவருடைய இசைப் பயணம் பரிமளித்து இசைத்துறை வளர்ச்சிக்கு - குறிப்பாகத் தமிழ் இசை வளர்ச்சிக்கு இவருடைய செயற்பாடுகள் ஏற்புடையதாக அமைந்து விளங்குகின்றன,
முத்துத்தாண்டவர் கீர்த்தனம் பாடம் செய்ய இங்கே கிளிக் செய்து பாா்க்ககவும்
பாடியவா் திரு,கும்பகோணம் சு,சங்கரராமன் அவா்கள் தலைமை ஆசிாியா்,சேலம்,
கிளிக் 👉👉👉 உனை நம்பினேன் ஐயா
இந்த வலைப்பக்கம் உருவாக்கம் ஆ,சங்கரன் நாதஸ்வர ஆசிாியா்,சேலம்
கருத்துகள்
கருத்துரையிடுக