கீதம் என்றால் என்ன ? விரிவான விளக்கம்
பொதுவாக கீதம் என்ற சொல்லுக்கு "இசைப்பாட்டு" என்று பொருள்.
ஆனால் இன்றைய கர்நாடக இசையில் 'கீதம்' என்பது இசை வடிவங்களில் எளிமையான ஒரு வகையைக் குறிக்கும்.
கீதம் என்ற இசை வடிவத்தில் பல்லவி, அனுபல்லவி, சரணம், என்ற பாகுபாடு கிடையாது. ஆனால் தாளத்துக்கு ஏற்றவாறு சுமார் 10 அல்லது 12 ஆவர்த்தங்கள் கூட இதில் காணப்படும்.
கீதத்தில் சங்கதிகள் இருக்காது சுரத்தின் போக்கு ஒரே சீராக இருக்கும் ஒவ்வொரு ஸ்வரத்துக்கும் ஓரெழுத்து தான் இருக்கும்.
பொதுவாக கீதங்களில் காணப்படும் சாகித்யம் இறைவனை பற்றியதாக இருக்கும்.
கீதம் பயிலும் மாணவ மாணவியரின் குரலுக்கு பயிற்சி அளிக்கும் நோக்கத்துடன் சில கீதங்களில் மந்த்ர ஸ்தாயி பகுதியிலும் தார ஸ்தாயி பகுதியிலும் சஞ்சாரங்கள் காணப்படுகின்றன.
அலங்காரங்களுக்கு பின்னர் இந்த கீதங்கள் கற்றுத்தரப்படுகின்றன.
தமிழிலும், தெலுங்கிலும், கன்னடத்திலும், வடமொழியிலும், பல கீதங்கள் இயற்றப்பட்டுள்ளன.
கீதங்களை இயற்றியுள்ள இசைப்புலவர்களில் சிலர்
1)புரந்தரதாசர், 2)பைடால குருமூர்த்தி சாஸ்திரி, 3)டைகர் வரதாச்சாரியார், 4)பெரியசாமி தூரன் ஆவர்.
கீதம் பாடம் செய்ய இதை கிளிக் செய்யவும் கணபதியே கீதம்
கீதம் பாடம் செய்ய இதை கிளிக் செய்யவும் கணபதியே கீதம்
கீதங்கள் இரண்டு வகைப்படும்.
1).சஞ்சாரி கீதங்கள்: (சாமானிய கீதங்கள் அல்லது சாதாரண கீதங்கள் என்றும் இதனை அழைப்பது உண்டு)
2). இலக்கண கீதங்கள்:
- அ).ஜனக ராக இலக்கண கீதங்கள்
- ஆ).ஜன்னிய ராக இலக்கண கீதங்கள்
சஞ்சாரி கீதங்களின் சாகித்தியம் பெரும்பாலும் இறைவனை பற்றியதாக இருக்கும். இன்று ஒழுக்கத்தைப் பற்றியும், இயற்கையைப் பற்றியும் கூட சில கீதங்கள் இயற்றப்பட்டுள்ளதைக் காணமுடிகிறது இலக்கண கீதம் என்பது கீதம் எந்த ராகத்தில் அமைக்கப்பட்டு இருக்கிறதோ அந்த ராகத்தின் இலக்கணத்தை சாகித்யத்தின் மூலமாக விளக்கும் கீதமாகும்.
1). ஜன்னிய இராகமாக இருப்பின் அது எந்த இராகத்தின் ஜன்னியம் என்ற குறிப்பும் அதன் வர்ஜ சுரங்கள்,வக்ர சுரங்கள்,கம்பித சுரங்கள், இராகத்தின் வகை முதலிய செய்திகள் சாதியத்தின் வாயிலாக வெளிப்படுத்தப்படும்.
(உதாரணம் )
மட்டிய தாளத்தில் அமைக்கப்பட்டுள்ள சகானா இராக இலக்கண கீதத்தில் கீழ்க்கண்டவாறு நாம் காண்கிறோம்.
"சகானா ராகம் காம்போஜி ஜன்யம் கம்பீர காந்தாரம் தீர்க்க மத்யமம் தைவத வக்ர நிஷாத கம்பித லலிதம்"
2).ஜனக ராக இலக்கண கீதம் பழங்காலத்தில் இது இராகங்க இராக இலக்கண கீதம் என்று அழைக்கப்பட்டது.
இத்தகையை இலக்கண கீதங்களில் மூன்று பகுதிகள் உண்டு.
- 1). சூத்திர கண்டம்.
- 2).உபாங்க கண்டம்.
- 3).பாஷாங்க கண்டம்.
சூத்திர கண்டத்தில் அந்த ராகத்தில் வரும் ஸ்வர ஸ்தானங்களை குறிக்கும் எழுத்துக்கள் வரிசையாக கொடுக்கப்படும்.
எடுத்துக்காட்டாக ரவி கோடி என்று தொடங்கும் மாயாமாளவகௌளை இலக்கண கீதத்தில்
- சுத்த ரிஷபம்
- அந்தர காந்தாரம்
- சுத்த மத்யமம்
- பஞ்சமம்
- சுத்த தைவதம்
- காகலி நிஷாதம்
ஆகிய ஸ்வரங்களைக் குறிக்கும் ர,கு,ம,ப,த, நு என்ற எழுத்துகள் வரிசையாக ஒவ்வொரு அரை ஆவர்த்தத்துக்கும் ஆரம்ப எழுத்தாக சாகித்தியத்தில் வந்துள்ளதைக் காணலாம்.
உபாங்க கண்டத்தில் கீதம் அமைக்கப்பட்டுள்ள ஜனகராத்திலிருந்து தோன்றிய ஜன்னிய இராகங்களுள் பாசாங்க வகையைச் சேர்ந்த இராகங்களின் பெயர்கள் காணப்படும்.
இவ்வாறு இலக்கண கீதங்களில் வழியாக பழங்காலத்தில் வழக்கத்தில் இருந்த இராகங்களின் ஸ்வரஸ்தானங்கள், ஜன்னிய இராகங்களின் பெயர்கள், எண்ணிக்கை போன்ற பல்வகையான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த குறிப்புகளை அறியமுடிகின்றது.
இலக்கண கீதங்களை இயற்றியுள்ள சில இசைப் புலவர்கள்.
- 1).வேங்கடமகி
- 2). இராமா மாத்யர்
- 3).கோவிந்த தீட்சிதர்
- 4).பைடால குருமூர்தி சாஸ்திரி.
கருத்துகள்
கருத்துரையிடுக