சதாசிவ பிரமேந்திரா் நிகழ்த்திய அற்புதங்கள்

 சதாசிவ பிரமேந்திரா் நிகழ்த்திய அற்புதங்கள்


கொடுமுடியில் நிகழ்த்திய அதிசயம்

சரீரம் மண்ணிலே புதைந்து போகுதல்

கொடுமுடிக்குப் பக்கத்திலே அகத்தியா் பாறை என்ற ஒரு இடம் உள்ளது.

 காவேரிக்கு நடு மையத்திலே ஒரு பெரும் பாறை. அதைச் சுற்றிக் கொண்டு தண்ணீர் ஓடுகிறது. 

பல சமயங்களில் அந்தப் பாறையின் மீது சதாசிவ பிரம்மம் உட்கார்ந்து கொள்வார். 

எங்கே போய் தவம் செய்தாலும் வயது வந்தவர்கள், விவேகம் உள்ளவர்கள் உபத்திரவம் கொடுக்கமாட்டார்கள். 

ஆனால் குழந்தைகள் அறியாமல் உபத்திரவம் கொடுத்துவிடுவார்கள். சின்னக் குழந்தைகள் தண்ணீரில் வர முடியாதல்லவா? 

பத்து நாட்கள் வரை கூட இவர் அந்தப் பாறையிலேயே உட்கார்ந்து விடுவார்.

 அப்படிப் பாறை மீது உட்கார்ந்திருந்த ஒரு தினத்திலே காவேரி பெருக்கெடுத்து இவரை உருட்டிக்கொண்டு சென்று மண்ணிலே புதைத்து விட்டது. 

சரீரம் மண்ணிலே புதைந்து போய்விட்டது. சில தினங்களில் தண்ணீர் வற்றியது. 

சதாசிவ பிரம்மத்தை அப்பகுதியில் காணாத மக்கள் பல இடங்களிலும் தேடிப்பார்த்து ஓய்ந்தனர்.

ஆறு மாதங்களோ அல்லது ஆறு வருடங்களோ ஓடி மறைந்தன. கட்டிடம் கட்ட மணல் வேண்டி கொடுமுடியிலிருந்து வண்டிகள் வந்தன. 

ஒரு இடத்திலே நல்ல மணல் உள்ளதென்று வண்டிக்காரர்கள் தோண்டினர்.

 அங்கே பெருமணல் கிடைக்கக் கண்டு சற்று ஆழமாகத் தோண்டத் தொடங்கினர். 

மண்வெட்டி, புதைந்திருந்த சதாசிவ பிரம்மத்தின் தலையில் பட்டு காயம் ஏற்பட்டு இரத்தம் வந்தது. மக்கள் இவரை சதாசிவபிரம்மம் என்றே அழைத்து வந்தனர். 

ஏனெனில் உடலையே மறந்து பிரம்மமாக இருக்கிறார், மெய்ப்பொருளாக இருக்கிறார் என்பதால் இரத்தம் வந்தவுடனே பயந்து போய்விட்டனர்.

 கிராமத்திற்குப் போய்ச்சொல்லி கிராம முன்சீப் பலரோடு சேர்ந்து வந்து பார்த்து இது சதாசிவ பிரம்மமே தவிர வேறு யாரும் இப்படி உயிருடன் இருக்க முடியாது என அறிந்து, 

சுற்றிலும் மணலை எடுத்து அவரை எழுப்பிவிட்டனர். பழரசங்களும் கஞ்சியும் கொண்டு தேய்த்து உடலைச் சூடாக்க புஷ்டி வந்து அவர் புறப்பட்டுப் போய்விட்டார். யாருடனும் பேசவில்லை. இப்படி நடந்த சித்திகள் பலப்பல.


வைக்கோல் போாில் மறைந்த அதிசயம்

புதுக்கோட்டை அரசரது திருவரங்குளம் காடுகளை அடுத்த நிலங்களின் வழியாக ஒரு சமயம் உடலை மறந்து எங்கேயோ சதாசிவ பிரம்மம் போய்க் கொண்டிருந்தார். 

அப்போது அங்கே வைக்கோல் போர் போடும் வேலை மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. 

ஒரு வரிசை போட்டாகிவிட்டது. அந்த வழியே சென்று கொண்டிருந்த பிரம்மம் ஏதோ தடுக்கி இரு வைக்கோல் சுமைகளுக்கிடையே விழுந்துவிட்டார். 

வைக்கோல் அவரை மறைத்துவிட்டது. இது வழி, வழியல்ல என்று இவருக்குத் தெரியாது. 

இடையே கல் தடுக்கி விழுந்தாலும் 10 நாட்கள் அப்படியே கிடப்பார். 

பின்னால் வைக்கோல் சுமை கொண்டு வந்தவர்கள் மேலே மேலே சுமைகளைப் போட்டனர். 

பெரிய வைக்கோற் போர், பத்தாயிரம் சுமை போட்டாகிவிட்டது. 

சதாசிவ பிரம்மமோ அதனடியிலே கிடக்கின்றார். எழுந்து வர வேண்டுமென்றால் வந்துவிடலாம். 

ஆனால் அவருக்கு அந்த எண்ணமே கிடையாது. 

ஒரு வருடம் கழிந்தது. மாடுகளுக்காக வைக்கோல் எடுத்து எடுத்துப் போர் குறைந்தது. 

இறுதியாக சுமை எடுக்கப்படும் பொழுது பிரம்மம் எழுந்து நடந்தார். 

அவரை பார்த்த வேலையாட்கள் மந்திரி மூலம் மகாராஜா விடத்திலே சொல்லினர்.

 புதுக்கோட்டை மகாராஜாவுக்கு தீட்சை அளித்தல்

மகாராஜா விஜய ரகுநாதத் சாதுக்களிடத்திலே பிரியமுள்ளவர்.

 சாஸ்த்திரங்கள் சுற்று தொண்டைமான் உணர்ந்தவர். 

இராஜ்ஜிய பரிபாலத்தில் பல தோஷங்கள் வந்து சேர வழியுள்ளதல்லவா?

 அதனால் ஏற்படும் பாவங்களை சாதுக்களை வைத்தே தீர்த்துக் கொள்ள முடியும் என நம்பியவர். 

அத்தகைய நற்குணமுடைய அரசன் சதாசிவ பிரம்மத்தை அரண்மனைக்கு அழைத்துச் சென்று விருப்பமுடன் சேவை செய்வார் என்று அறிந்தே மந்திரிகள் மகாராஜாவிடம் சென்று கூறினார்கள்.

மகாராஜாவும் ஒரு பல்லக்கைக் கொண்டு வரச் சொல்லிவிட்டு தான் ஒரு குதிரையில் விரைந்து சதாசிவ பிரம்மம் வீற்றிருந்த இடம் வந்து சேர்ந்தார்.

 பிரதட்சண நமஸ்காரம் செய்து அரண்மனைக்கு எழுந்தருளப் பிரார்த்தித்தார்.

 இவரோ பேசவில்லை. 

நடந்து திருவரங்குளம் காட்டில் முள் மரங்கள் மத்தியிலே சென்று அமர்ந்தார்.

 அழைத்தும் வரவில்லை. 

அரசனும் அருகிலேயே ஒரு சின்னக் குடிசை அமைத்துக் கொண்டு அங்கேயே தங்கி இவருக்குச் சேவை செய்யத் தொடங்கினார். 

இடையிடையே இராஜாங்கக் காரியமாக அரண்மனைக்குச் செல்வதும் பெரும் பொழுது பிரம்மத்தின் சேவையிலுமாக எட்டு வருடங்கள் கழிந்தன

ஒரு தினம் தமக்குத் தீட்சை தரவேண்டுமென பிரம்மத்திடம் விரும்பிக் கேட்டார் மகாராஜா. 

பிரம்மமும் மகாராஜாவுக்கு தீட்சை தரலாம் என எண்ணினார் போலும்!

மணலிலே மந்திரத்தை எழுதிக் காண்பித்தார். அந்த மந்திரத்தை மகாராஜா கற்றுக் கொண்டு, 

இந்த மணலை தன் அங்கவஸ்திரத்தில் எடுத்துக் கொண்டு அரண்மனை சென்று தங்கப் பேழையில் வைத்து பூஜை செய்யத் தொடங்கினார். 

அந்தப் பூஜை இன்னும் புதுக்கோட்டை அரண்மனையில் நடந்து வருகிறது.

சில நாட்களுக்குப் பிறகு மகாராஜா அவரிடம் சாஸ்த்திர சந்தேகங்களைக் கேட்க ஆரம்பித்தார். 

அப்போது சதாசிவ பிரம்மத்திற்குப் பேச வேண்டுமென்ற எண்ணம் கிடையாது. 

பிரம்மம் பேச விரும்பவில்லை என்பதை மகாராஜா உணர்ந்து கொண்டு தமது தவறுக்காக வருந்தினார். 

எங்கு சென்றாலும் எப்படியும் சரீரத்தை உகுக்கும் காலத்தில் அடியேன் தங்களை தரிசிக்கும் வரமருள வேண்டும் என ஆழ்ந்த பக்தியோடு பிரார்த்தித்தார். 

பிரம்மமும் மகாராஜாவின் உத்தம குணங்களை அறிந்து "உத்தமர் கோயிலிலுள்ள கோபால கிருஷ்ண சாஸ்த்திரிகளை அழைத்து வந்து நீ சாஸ்த்திரக் கருத்துக்களைக் கேட்டுத் தெரிந்து கொள்" எனப்பணித்தார்.

 மகாராஜாவும் அவ்வாறே செய்தனர். சில நாட்களில் பிரம்மம் அங்கிருந்து புறப்பட்டுப் போய்விட்டார்.

திருப்பதி வெங்கடாஜலபதிக்கு நிகரான தான்தோன்றிமலை


கரூரில் வசித்து வந்த சாஸ்த்திரிகளும் கனபாடிகளும் 95 சமயத்திலே சதாசிவ பிரம்மத்தை அணுகி, "திருப்பதி சென்று வெங்கடாஜலபதியைத் தரிசித்து ஆசி பெற்று வருவது மிகவும் சிரமமாக இருக்கிறது. 

ஆகவே தேவரீர் எங்களை ஆசீர்வதித்து திருப்பதி வெங்கடாஜலபதியைத் தரிசித்தால் என்ன நன்மை உண்டாகுமோ அந்த நன்மை தான்தோன்றிமலை அப்பரைத் தரிசிக்க உண்டாக வேண்டுமாய் அருள் புரிய வேண்டும்" என வேண்டினர். 

அந்தக் காலத்தில் திருப்பதி செல்வதென்றால் கட்டை வண்டியில் உணவும், மாடுகளுக்குத் தீவனமும் கொண்டு செல்ல வேண்டும். 

அவர்கள் படும் இடர்களுக்கோ அளவில்லை. 

சதாசிவ பிரம்மமும் மகிழ்ச்சியோடு தான்தோன்றிமலை சென்று தான்தோன்றி மலையப்பரைப் பூஜித்து, ஜன ஆக்ரஷ்ண சக்கரம் ஒன்று எழுதி பூஜை செய்து அங்கு அமைத்தார். 

ஆகையால் அன்றும் இன்றும் தான்தோன்றிமலையில் வேண்டுவோர் வேண்டுவது கிடைக்கப் பெறுகிறது. 

புரட்டாசி மாதம் மூன்றாவது வாரம் சற்குரு சதாசிவம் தான்தோன்றிமலை அப்பரை பூஜை செய்த நாளை இப்போதும் மக்கள் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர்.


தஞ்சை புன்னைவன மாரியம்மன் 
உருவம் வகுத்துக் கொடுத்த சம்பவம்

தஞ்சாவூருக்கருகில் 3 கல் தொலைவில் புன்னைவனக் காடுகள் உண்டு. அங்குள்ள புன்னைவனம் மாரியம்மன் கோவில் இன்றும் மிகவும் பிரசித்தமானது. 

அன்று அந்த புன்னை மரக்காடுகளிலே சதாசிவபிரம்மம் அமர்ந்து கொண்டிருந்தார்.

அக்காலத்திலே மகாராஜாவாயினும் அதிக தூரம் நடந்தும் சற்றே குதிரையேறியும் இராமேஸ்வரம் செல்லுவது வழக்கம். 

அவ்வாறு தஞ்சாவூர் மகாராஜா தனது பெண் குழந்தையுடன் இராமேஸ்வரம் சென்று திரும்பினார். 

உஷ்ணம் பொங்கி குழந்தைய யின் கண்களிலிருந்து இரத்தம் வந்தது. பல ஔஷதங்களைப் பரிட்சித்தும் குணம் காணவில்லை. 

ஆகவே மகாராஜா சமயபுரம் மாரியம்மனுக்கு வேண்டுதல் செய்தார்.

 குழந்தையின் கண் நோய் நீங்கினால் தங்கத்தினால் கண் செய்து வைப்பதாக வேண்டிக் கொண்டார். 

அன்று இரவே மகாராஜாவின் கனவில் "நான் இங்கிருக்க நீ சமயபுரம் போவதென்ன?" என அம்மன் திருவுளமருளினார்கள். 

விழித்துக் கொண்ட மகாராஜா தம் இராஜ்ஜியத்திலேயே அம்மன் எழுந்தருளியிருக்க நாம் அறியாது போனோமே என வருந்தி, மந்திரி பிரதானிகளை அம்மன் எழுந்தருளியுள்ள இடத்தைக் கண்டுபிடிக்க நாலா பக்கங்களிலும் அனுப்பி வைத்தார்.

எங்கு தேடியும் மாரியம்மன் கோவில் கிடைக்கவில்லை. ஓரிடத்தில் ஒரு புற்றுக்கு வேப்பிலை வைத்துச் சின்னக் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தார்கள், 

மாரியம்மன் பேர் சொல்லி. இதை மகாராஜாவிடம் வந்து கூறினர்.

மகாராஜாவும் பிரதானிகளுடனே புன்னைவனக் காடுகளைச் சுற்றி வந்தார். இக்காடுகளில் ஏதோ ஒரு அதிசயம் உண்டென அவரது உள்ளுணர்வு சொல்லிற்று. 

அப்போது ஒரு புன்னை மரத்தடியிலே சதாசிவ பிரம்மம் வீற்றிருப்பதைக் கண்ட பிரதானிகள் மகாராஜாவை அவரிடம் அழைத்துச் சென்றனர்.

கண்ணால் கண்டவுடனே பெரிய மகான் என அறிந்து கீழே விழுந்து வணங்கி எழுந்து அவரிடம், "இங்கு மாரியம்மன் கோவில் உள்ளதாக சொப்பனம் கண்டேன். 

ஆனால் மாரியம்மன் கோவிலைக் காணேன். வேப்பிலை சொருகி புற்றருகே குழந்தைகள் விளையாடுவதைத் தான் கண்டேன். 

தாங்கள் திருவுளம் கொண்டு தெரிவிக்க வேண்டும்" என பிரார்த்தித்தனர்.

பிரம்மம் அந்தப் புற்றேதான் மாரியம்மன் என்றார். 

மகாராஜா அதற்கு "இப்படி இருந்தால் வழிபாடு எப்படிச் செய்யமுடியும் ? தாங்கள்தான் உருவம் வகுத்துக் கொடுக்க வேண்டும்" எனப் பிரார்த்தித்தார்.

 


பிரம்மம் அவருக்கு அஷ்ட கந்தங்களைப் பற்றிச் சொன்னார்கள். சாம்பிராணி புனுகு, ஜவ்வாது, கஸ்தூரி, கோரோசனை, அகில், சந்தனம், குங்குமப்பூ. பச்சைக் கற்பூரம் ஆகிய சாமான்களைக் கொண்டு வரச் சொல்லி அந்த மண்ணிலேயே பிசைந்து சதாசிவ பிரம்மமே அந்த மாரியம்மனைச் செய்தார்.

 ஜன ஆக்ரஷ்ண சக்கரம் ஒன்று எழுதி அம்மன் முன்னார் வைத்து இதைப் பூஜை செய்ய குழந்தைக்குக் குணம் கிடைக்கும் என்றருளினார். அவ்வாறே குழந்தையும் நலம் பெற்றது.

தொடர்ந்து பூஜை நடந்துவர மகாராஜா ஏற்பாடு செய்து வைத்துள்ளார். 

முன்பு பாதாளக் குகை வழியே தினமும் அரசனும் அரச மகளிரும் அம்மன் ஆலயம் வந்து தரிசனம் பண்ணிக் செல்வார்களாம். 

அம்மன் பூஜை இன்றும் நடந்து கொண்டிருக்கிறது. 5 வருடங்களுக்கு ஒருமுறைதான் சாம்பிராணித் தைல அபிஷேகம் அம்மனுக்குச் செய்வார்கள்.


 மண்ணினால் செய்யப்பட்ட அம்மன் அல்லவா? இந்த 5 வருடங்களுக்குள் அம்மன் பலரது கனவில் தோன்றி புடவைகள் அணிவிக்குமாறு சொல்வார்கள்.

 அபிஷேக பூஜையின்போது அம்மனுக்கு அணி செய்த பல பட்டுப் புடவைகளை உரித்தெடுக்கும் விழாக் காணக் கண் கோடி வேண்டும்.


            சதாசிவ பிரம்மம் பஞ்ச யோக சித்தி பெற்றபின் ஒரு சமயம் சித்தம் பகிர்முகப்பட்ட ஒரு சந்தர்ப்பத்திலே இளமைப் பருவத்தில் தம்மோடு கற்ற போதேந்திராளையும், அய்யாவாளையும் சிந்தித்தனர். 

அது சத்திய சங்கல்பம். ஆகையால் அதிலிருந்து அகமுக திருஷ்டியோடு இருந்தாலும் கால்கள் மெல்ல நடந்து எப்படியோ போதேந்திராள் வதியும் கோவிந்தபுரம் அருகே சென்றடைந்தனர். 

போதேந்திராள் தங்கியிருப்பதற்கு அருகாமையிலுள்ள காவேரிக் கரையில் உள்ள நாணற் புதர்க்கருகில் சென்றவுடனே பழைய சத்திய சங்கல்ப சிந்தனை ஓய்ந்தது. நாணற் புதரில் படுத்துக் கொண்டார். 

அதுசமயம் திருவிசைநல்லூர் அய்யாவாள் வாரம் ஒருமுறை போதேந்திராளைத் தரிசிக்கக் கோவிந்தபுரம் வருவார். 

அன்று வருகின்ற வழியில் நாணற்புதரில் இவர் படுத்திருப்பதைப் பார்த்து யாரோ ஒரு பெரிய மகாநுபாவர். இவருடைய ஆசி கிடைத்தால் யோகவானாவோம்' என்று எண்ணி பிரதட்சண நமஸ்காரம் பண்ணினார்.

 தோத்திரம் செய்தார். சதாசிவ பிரம்மம் அகமுக திருஷ்டியிலேயே இருந்துவிட்டார். கண் திறந்து பார்க்கவில்லை. இது அபார நிலை.

         அய்யாவாள் தமது குருநாதராகிய போதேந்திராளிடம் தெரிவித்து  இவரைப் பகிர்முகப்படுத்தி அநுக்கிரகம் பெற முயற்சிக்க வேண்டும். என எண்ணி, போதேந்திராளை அணுகி வணக்கம் செலுத்தி, "ஹே குருநாதரே! அருகிலுள்ள நாணற்புதரில் ஒரு மூகை கிடக்கிறது"  என ஆர்வத்தோடு கண்ணீர் கசிந்துருகக் கூறினார். 

உடனே  போதேந்திராள் எழுந்து அப்பேற்பட்ட மகாநுபாவரை தரிசிப்போம் எனப் புறப்பட்டார். 

அங்கு கிடப்பது சதாசிவ பிரம்மம் என்பது இவர்களுக்குத் தெரியாது. 

யாரோ ஒரு திகம்பரர், அவரது அனுக்கிரஹம் பெறல் சிலாக்கியம் என எண்ணியவர்களாக பிரம்மேந்திராள் படுத்திருக்கும் சுற்றுவட்டத்திலுள்ள புதர்களையும் செடிகளையும் அப்புறப்படுத்தி மெழுகி, தீபம் கொளுத்தி வைத்து, சாம்பிராணிப் புகையும் உண்டுபண்ணினார்கள்.

         பின்னர் போதேந்திராள் ராமநாமத்தை யோக வலிமையால் பிரம்மேந்திராளுடைய உடலுக்குள் புகுத்தினார். 

போதேந்திராள் ராமநாத சித்தாந்தம் செய்தவராயிற்றே! சதாசிவ பிரம்மமும் ராமநாமத்துக்கு அதிக மகிமை கொடுத்து கீர்த்தனைகள் பாடியிருக்கிறார். ஆகவே

ராமநாம மகிமையால்  மகிரிஷியை பகிர்முகப்படுத்தி ஆசி பெற்றுக்கொண்டு மன்னிப்புக் கோருவோம்,  ஆழ்ந்த அது ஒரு பெரிய குறைபாடு ஆகாது என்று ராமநாமத்தைப் பாடினர். 

பிபரே ராமரஸம் என்ற கீர்த்தனையைப் பாடினர். 

அனுபவத்திலிருந்த பிரம்மத்தின் உள்ளம் வெளிப்பட்டு கண் விழித்துப் பார்த்தது. 

இரண்டாவது கீர்த்தனையாகிய கேலதி மம ஹிருதயே என்ற கீர்த்தனை பாடும்போது அதிலுள்ள சப்தபேதத்தை பிரம்மப் திருத்தியமைத்தார். 

வாக்கு வெளிவந்தவுடன் இது சதாசிவ பிரம்மமே எனத் தெரிந்து கொண்டு பேரானந்தத்தோடு புகழ்ந்து கொண்டே எண்ணற்ற வணக்கங்கள் செலுத்தினார்கள். 

சதாசிவ பிரம்பப் அதன்பின் ஏதும் பேசவில்லை.

 இருவரையும் பார்த்தவுடன் அகமுக திருஷ்டி வந்து விட்டது. 

மிகுந்த பிரயத்தனப்பட்டும் ஆசிரமத்திற்கு அவரை அழைத்துச் செல்லமுடியவில்லை. 

பிரம்மமும் பகிர்முகப்படவில்லை. உடனே அங்கிருந்து ஆகாய மார்க்கமாகவோ, நடந்தோ வேறு இடம் சென்றுவிட்டார்கள். 

கர்ண பரம்பரையாக வந்த இந்த விஷயத்தை கோவிந்தபுரத்தில் பூஜை செய்து கொண்டிருந்த சாஸ்த்திரிகள் சொல்லக்கேட்டது ஆகும்.


          சதாசிவ பிரம்மம் நிகழ்த்திய சித்திகளில் நாம் அறிந்து வைத்தவை ஒரு சில. நாம் அறியாமல் அவர் நிகழ்த்திய அற்புதங்கள் எத்தனையோ யாரறிவர்! 

பிரம்மத்திடம் அன்புகொண்ட குழந்தைகள் மகிழும் வண்ணம் கண்ணிமைக்கும் நேரத்தில் மதுரை மாநகருக்கு அழைத்துச் சென்று விழாக் காணச் செய்து திரும்பியதும், 

பிணியால் பெருந்துயருற்ற அன்பர் பலரைத் தம் அருட்பார்வையால் பிணி நீக்கி மகிழ்வித்ததும், 

தம்மைத் தாக்க வந்த அறிவிலிகள் செயலற்று மலம் என நின்றுவிடச் செய்ததுமான பல அற்புதங்களையும் சொல்லச் சொல்லப் பெருகும்.

 இறுதியாக ஒரு சித்தி. இவ்வுடலொடு உலகம் சுற்றும் எண்ணம் விடுத்து ஜீவசமாதியடைந்துவிட வேண்டும் என்ற நினைவு அவருக்கு எழச் செய்த நிகழ்ச்சி அதுவாகும்.

 இராஜ்ஜியத்தைத் துறந்த முஸ்லீம் அரசன்

ஒரு சமயம் வழக்கம்போல் உடல் நினைவேயன்றி பிரம்மமாக எங்கேயோ நடந்து போய்க் கொண்டிருக்கும்போது அரசன் கொலு வீற்றிருக்கும் அவையினுள் சதாசிவ பிரம்மம் நுழைந்து நடக்கிறார். 

திறந்திருந்த வாயில் வழியே உள்ளே புகுந்த பிரம்மம் அரசன் முன்பாக நடந்து போய்க் கொண்டிருக்கிறார். 

"ஏதோ ஒரு பைத்தியக்காரன், துணிகூட இல்லாமல் வருகிறானே! கொலு மண்டபத்தினுள்ளே அவனைப் பிடித்துக் கட்டுங்கள்" என அந்த முஸ்லீம் அரசன் உத்திரவிட்டான். 

காவலர் யார் கண்ணுக்கும் தெரியவில்லை. அரசன் மட்டும்தான் காண்கிறான். 

பிரம்மம் நெருங்கி வந்ததும், "எவனுக்கும் புத்தியில்லை, இவன் நேரே நம்மிடம் வருகிறான் பார்" எனச் சினந்து வாளை உருவி அவரது கைகளை வெட்டி விட்டான். 

ஒரு கை கீழே விழுந்துவிட்டது. மற்ற கை பாதி ஒட்டிக் கொண்டிருக்கிறது. இரத்தம் கொட்டுகிறது. ஆனால் சதாசிவ பிரம்மத்திற்கு இது தெரியாது.


           யோனுத் பன்ன விகாரோ பாஹௌ 

           மிலேச்சேன சின்ன பதிதேபி

           அவிதித மமதாயாஸ்மை 

           பிரணதிம் குர்ம: ஸதாசிவேந்திராய


என சச்சிதானந்த சிவாபிநவ நரசிம்ம பாரதி மகா சுவாமிகள் பிரம்மேந்திராள் அனுக்கிரகம் கிடைத்த பின்னர் பாடிய பாடல் இதுவாகும்.


பாஹௌ - பிரம்மேந்திராளின் கைகளை, மிலேச்சென சின்ன பதிதேபி ஒரு மிலேச்சன் வெட்டி வீழ்த்திவிட்ட பிறகும், உத்பன்ன விகாரோ-விகாரம் உண்டாகாததினால் அவிதிதமமதா என்னுடையது என்ற எண்ணமே இல்லை. யாஸ்மை - அப்பேற்பட்ட, ஸகுர்ம ஸதாசிவேந்திராய - சற்குரு ஸதாசிவேந்திரரை, பிரணதிம் நமஸ்கரிக்கின்றேன்.


உடல், தான் என்ற எண்ணம் இருந்தால் அல்லவா அவருக்கு அது தெரியும்! அந்த எண்ணமே இல்லாத பரம்பொருளான அவருக்கு எப்படித் தெரியும் ?


கை கீழே விழுந்த பிற்பாடு வழியேதும் இங்கு இல்லை போலும் என்ற எண்ணத்தில் பிரம்மம் திரும்பிப் போகிறார், 

கையோ கீழே கிடக்கிறது. அரசன் பார்த்துப் பயந்து நடுங்கி, 'பெரிய அபராதம் செய்துவிட்டேன். 

யாரோ ஒரு பெரிய மகான் இந்து மகான். எவ்வுளவு பெரிய மகான்! நமக்குத் தெரியவில்லை, 

நாம்தான் மிலேச்சன். நாம்தான் பாவி' என எண்ணினான். 

பிரஜைகளை ரட்சிக்கவேண்டிய அரசன் அந்தப் பிரஜைகளுக்குப் பாதுகாப்பாக இருக்கும் மகரிஷியின் கைகளைச் சேதித்து விட்டோமே! நாம் உயிரோடு இருக்கலாமா? இந்த வாளாயுதத்தாலேயே அவர் எதிரில் உயிரை மாய்த்துக் கொள்ளவேண்டுமென்று வாளாயுதம் ஏந்தி, ஒரு கையில் துண்டிக்கப்பட்ட கையையும் எடுத்துக் கொண்டு ஓடிச்சென்று சதாசிவபிரம்மத்தின் திருவடிகளைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு அழுதான். 

அரசனுக்கும் மனோபலம் இருக்குமல்லவா! அந்த பலத்தால் பிரம்மம் விழித்து உள்ளம் வெளிப்பட்டு, "என்னப்பா?" என்றார். "பெரிய அபராதம் பண்ணிவிட்டேன். மன்னிக்கவேணும்" என்றான்.

 “அபராதம் பண்ணியவனும் இல்லை. ஏற்றுக்கொண்டவனும் இல்லை. "போ" என்றார் சதாசிவபிரம்மம். அரசனோ "மன்னித்துவிட்டேன் என்று சொன்னால் ஆயிற்று. இல்லையெனில் இந்த வாளாயுதத்திற்கு நான் இரையாகிவிடுவேன்" என்றான். 

எவ்வளவு பெரிய பாதகம் பண்ணிவிட்டேன் என அலறினான். 

பிரம்மம் "என்ன?" என்றார். "தங்கள் கைகளைத் துண்டித்துவிட்டேனே" என்றான் அரசன், அப்போதுதான் அதை அறிந்தார் பிரம்மம். 

எடுத்துக் கொடுத்தான் அரசன். கையில் வைத்துத் தடவினார். ஒட்டிக் கொண்டன கைகள். தன் வழியே நடந்தார். 

பின்னர் அந்த முஸ்லீம் அரசன் இராஜ்ஜியத்தைத் துறந்து சென்று விட்டதாக அறிகிறோம்.

உடல் வேண்டாம் என்று எண்ணிய சதாசிவ பிரமேந்திரா்


இந்த நிகழ்ச்சி நடந்தவுடனே இந்தச் சந்தர்ப்பத்திலே ஒரு பிரக்ஞை வந்து, 

தன், உடல் எண்ணம் வந்து, அரசனுக்கு அவன் செய்த பாதகம் அவனைப் பீடிக்காமலிருக்க வேண்டுமென ஆசி வழங்கினார். 

மன்னித்து விட்டு மேலும் எண்ணிப் பார்க்கிறார். 'நாம் வேண்டாம் என்று சொன்னாலும் அவன் செய்த வினையின் பயனை அடுத்த பிறவியிலேனும் அநுபவிக்க வந்து விடுமே. 

அப்பேற்பட்ட பாதகங்களை அநுபவிப்பதற்கு ஏதுவாக உடலை மறந்து நாம் ஏன் திரிய வேண்டும்? 

சுற்றியது போதும்' எனத் தீர்மானித்துக் கொண்டு அங்கிருந்து நேரே நெரூர் வந்து சேர்ந்தார்.


பொறுமையால் பிராரத்துவத்தை புசிக்கும் நாட் செய்யும் கர்மம் 

மறுமையில் தொடர்ந்திடாமல் மாண்டு போம் வழி ஏதென்றால் 

சிறியவர் இகழ்ந்து ஞானி செய்த பாவத்தைக் கொள்வார் 

அறிவுளோர் அறிந்து பூசித்து அறமெல்லாம் கைக்கொள்வாரே



இந்தத் தத்துவஞானம் வருவதற்கு முன்பு அபிமானித்துச் செய்த புண்ணிய பாவங்களின் பலனை, இந்த உடல் முன் சரீரங்களிலே செய்தவற்றை அனுபவித்துக் கொண்டுதானிருக்கும். 

இப்பிறவியில் அபிமானம் இல்லாததாலே கையை வெட்டினாலும் வருத்தம் தெரிவதில்லை. 

யாராவது புஷ்பமாலை போட்டாலும் சந்தோஷம் தெரியாதல்லவா? 

ஆகவே அந்தப் புண்ணிய பாவங்கள் எங்கே போகும் எனக் குருவை சிஷ்யன் கேட்கிறான் 

கைவல்யத்திலே. குரு சொல்கிறார். 

பொறுமையோடு இருந்து மகிழ்ச்சியும் வாட்டமும் இல்லாமல் புண்ணியத்தின் பலனையும் பாவத்தின் பலனையும் அனுபவிக்கிறதாலே அந்த பாவத்தின் பலனை பாவிகள் எடுத்துக் கொள்வர். 

புண்ணியத்தின் பலனை நல்லோர் எடுத்துக் கொள்வர் என்று குரு சொல்கிறார். 

அது எவ்வாறு என சிஷ்யன் விளக்கம் கேட்க குரு பதிலிறுக்கிறார். 

எவ்வாறெனில் மகரிஷிகளை நிந்தித்து, மகரிஷிகள் முற்பிறப்பில் செய்த பாவத்தின் பலனை பாவிகள் எடுத்துக் கொள்வர். 

விவேகிகள் அவரைப் புகழ்ந்து துதித்து வேண்டிய சேவை செய்து அவர் செய்த புண்ணியத்தின் பலனைப் பெற்றுக் கொள்வார்கள். 

மகரிஷிகளுக்குப் புண்ணியமும் இருக்காது. 

பாவமும் இருக்காது. 

உடல் விழுந்தால் விதேக கைவல்யம் பெற்றுவிடுவார்கள். 

ஆகவே சதாசிவ பிரம்மத்திற்கு இது தெரிந்திருந்ததனால் உடலை மறந்த இந்நிலையில் உடலோடு உலகத்தில் சுற்றிக்கொண்டு இருப்பது மற்றவர்களுக்கு (அவிவேகிகளுக்கு) பாதகத்தை ஏற்கச் செய்யும் சூழ்நிலை வந்துவிடும். 

இந்த நிலையெல்லாம் நமக்கு வேண்டாம் என சதாசிவ பிரம்மம் எண்ணிப்பார்த்து விட்டு உடலை மறைத்துவிடுவோம் எனத் தீர்மானித்தார்கள்.


                                      அடுத்து ஜீவ சமாதி அடைதல்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சீர்காழி முத்துத்தாண்டவர்

*காருகுறிச்சி அருணாசலம்* அவர்களின் வாழ்க்கை வரலாறு

புரந்தர தாஸர்