நெரூர் சதாசிவ பிரம்மேந்திரர் வாழ்க்கை வரலாறு


சதாசிவ பிரம்மேந்திரர் வாழ்க்கை வரலாறு

சுமார் 350 ஆண்டுகட்கு முன்பு மதுரை மாநகரிலே சோமநாத யோகி, பார்வதி தேவி என்று தெலுங்கர் குலத்தில் பிறந்த இரண்டு தம்பதிகள் இல்வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்தார்கள். சோமநாத யோகியரது தாய் தந்தையர் யார் என எந்த சரித்திரத்திலேயும் எழுதப்படவில்லை. ஆகவே சோமநாத யோகி அவர்களைப் பற்றிக் கொஞ்சம் சொல்வோம்.


பிரம்மேந்திராளுடைய தகப்பனார் சோமநாத யோகி. தாயார் பார்வதி தேவி. அவருக்கு யோகிப் பட்டம் இளமைப் பருவத்திலேயே வந்துவிட்டது. அந்த யோக மகிமையினாலே நீண்ட காலம் இந்த உடலோடு வாழலாம் என்று நினைத்துக் கொண்டு குண்டலினி யோகத்தை அப்யசித்தார். பிராணபந்தம் செய்யும் முறையைக் குண்டலினி யோகம் என்பர். அதிலே வெற்றியும் பெற்றார். பிரம்மச்சரிய விரதம் அனுஷ்டித்தால்தான் குண்டலினி யோகம் நல்ல முறையிலே பலன்தரும். அநிமா, மகிமா, கரிமா, லகிமா, பிராப்தி, பிரகாமியம், ஈசத்வம், வசித்வம் என்று சொல்லப்பட்ட அஷ்ட சித்திகளும் கைகூடும் என்று சாஸ்த்திரங்களிலே சொல்லப்பட்டுள்ளது. அதை அனுபவித்தே ஆகவேண்டுமென்ற எண்ணத்திலே பிரம்மச்சரிய விரதத்தைக் கைக்கொண்டு சோமநாத யோகி யோகத்தைப் பயின்று வந்தார்.


சோமநாத யோகியினுடைய தாய், தந்தையர் தம் புத்திரன் 25 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்ற எண்ணம் இல்லாமலே இருக்கிறானே என்று கவலைப்பட்டனர். மகனுக்குத் திருமணம் முடித்துவிட்டால் வானப்பிரஸ்தாச்சிரமம் மேற்கொண்டு பஞ்ச யக்ஞங்களைச் செய்து வயோதிகம் வந்த பிற்பாடு சொர்க்காதி போகங்களைப் பெறவேண்டும். அதற்கும் மேற்பட்ட மெய்மை நிலையை அடையவேண்டும் என விரும்பினார்கள்.

ஒரு தினத்திலே புத்திரனை அழைத்துத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் எனக் கேட்டார்கள். தனக்குத் திருமணம் செய்து கொள்ளப் பிரியமில்லை என்று சொல்லிவிட்டார் சோமநாத யோகி. நாலைந்து மாதங்கள் கழிந்தன. மீண்டும் அவரை அழைத்துப் பேசலுற்றனர். 'நாங்கள் தவம் செய்ய வேண்டியவர்களாக இருக்கிறோம். வீட்டிலே விளக்கு வைக்க ஒரு ஆள் வேண்டுமென்று சொல்வார்கள். ஒரு சந்ததி அருட்சந்ததி வந்து கொண்டே இருக்க வேண்டும். அந்த சந்ததியினாலே நாட்டுக்கு நலன் கிடைக்கும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். ஒரு சந்ததியை நாங்கள் உண்டு பண்ணிவிட்டோம். நீயும் திருமணம் செய்துகொண்டு ஒரு சந்ததியை. உண்டு பண்ணிவிட வேண்டும். நீ திருமணம் செய்துகொண்டால். நாங்கள் வானப் பிரஸ்தாச்சிரமத்தைக் கடைபிடித்து எங்கள் வாழ்க்கை உயர்ந்து போவதற்கு ஏதுவாக இருக்கும். தாய் தந்தையரது வார்த்தைக்கு பதில் சொல்லிப் பழகக்கூடாது' என வற்புறுத்தினர். சோமநாத யோகியும் அப்படியே ஏற்றுக்கொண்டார். பதில் சொல்ல முடியாத சூழ்நிலையில் தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை, தந்தை சொல் மிக்க மந்திரமில்லை. அவர்கள் சொல்கின்ற வார்த்தையைக் கடவுள் வார்த்தையாக ஏற்று நடக்கவேண்டுமென்பது இந்து தர்மத்தின் ஐச்வரியம். சொற்களை அப்படியே ஏற்க வேண்டுமாம். அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வமன்றோ! திருமணம் நடந்தது.


பார்வதி தேவி என்ற ஒரு அம்மையை திருமணம் செய்துவைத்தார்கள். இவர் இல்வாழ்க்கை ஏற்றுக் கொண்ட உடனே அவரது தாய் தந்தையர் வானப்பிரஸ்தாச்சிரமம் ஏற்றுக்கொண்டனர். பஞ்ச யக்ஞங்களைச் செய்து கொண்டே சரீரம் உள்ளவரை தவம் செய்து வீடுபேறடைந்தனர்.


சோமநாத யோகியும், பார்வதி தேவியும் கடுந்தவம் இயற்றினர். பிரம்மச்சரிய விரதத்தைக் கடைப்பிடித்துச் சோமநாத யோகியோகம் பயின்றுவந்தார். அதிலிருந்து மாறுபடவேயில்லை. 15  வருடங்கள் கழிந்தன. அவருக்கு 40 வயதாகிவிட்டது. 25-இல் திருமணம் முடித்து 40 வயதாகியும் ஒரு சந்ததி உண்டு பண்ணவேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் அவர் இருக்கிறார் என்பதைப் பார்வதி தேவி தெரிந்துகொண்டு அவரிடம் *சுவாமின் ! 15 வருடமாகிறது திருமணம் நடந்து, திருமணம் செய்து கொண்ட தம்பதியருக்கு ஒரு சத்புத்திரன் வேண்டுமென்று சொல்வார்களே" எனப் பணிவோடு கேட்டார். அதற்குச் சோமநாத யோகி சொல்வார்! *சத்புத்திரன் வேண்டுமென்று விரும்புவது பெரியோர்களது அபிப்பிராயம். உன்னுடைய வாக்கிலிருந்தே வந்துவிட்டது சத்புத்திரன் என்று. ஆனால், சத்புத்திரன் வேண்டுமென்றால் கோடிக்கணக்கான மந்திர ஜெபம் செய்யவேண்டும். உன்னுடைய உடலின் இரத்தத்திலுள்ள அணுக்கள் எல்லாம் ராம நாமத்தைச் சொல்லவேண்டும். அப்பொழுது உடலும் பௌருஷம் பெற்றிருக்கும். உள்ளமும் புனிதத்வம் பெற்றிருக்கும். அப்பொழுது ஒரு கெர்ப்பம் உண்டானால் அந்த கெர்ப்பத்தில் உயர்ந்த அறிவாற்றல் நிறைந்த ஒரு மகரிஷி வந்து புகுவார். அது நாட்டுக்கு நல்லது" எனக்கூறினார்.


தாய், தந்தையர் எண்ணங்கள் எவ்வுளவு உயர்ந்ததாக இருக்கிறதோ அந்த அளவு யோக்கியதை உடைய ஜீவன் கெர்ப்பத்தில் புகும். கெர்ப்பத்தில் உயிர் எங்கேயோ இருந்துவந்து புகுவதே தவிர உடலுக்குள்ளேயே உயிர் அல்ல. ஏழாம் மாதம் உயிர் வந்து புகும் என்று சாஸ்திரம் சொல்லும், 'வேத நூல் பிராயம் நூறு மனிதர்தாம் புகுவாரேனும்' என்பது திருவாய் மொழி, அதுவரை பிண்டம்தான் உண்டுபண்ணுவார்கள். அந்தப் பிண்டம் எந்த அளவுக்கு யோக்கியதை உள்ளதாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு யோக்கியதைக்குரிய ஜீவன் எங்கேயோ உடலை விட்டவுடனே இந்த உடலில் வந்து புகுந்து கொள்ளும். உதாரணமாக தின வாடகை ரூ. 300 அல்லது 500 என வசூலிக்கும் விடுதி அறைகளிலே ஐஸ்வர்யம் படைத்தவர்கள் தான் சென்று தங்குவார்கள். அவர்கள் தின வாடகை ரூ. 5 அல்லது 10 எனக் கேட்கும் விடுதிகளுக்குப் போவார்களா? மாட்டார்கள். இதுபோன்று நாம் எந்த அளவுக்கு உடலை உண்டு பண்ணி வைத்திருக்கிறோமோ, கரு உண்டு பண்ணி அதை எந்த அளவுக்கு அருளோடு வளர்த்திருக்கின்றோமோ, அதிலே புகும் உயிர் எங்கேயோ இருந்து வந்து புகுவதனாலே இதன் யோக்கியதை தெரிந்துகொண்டு புகும் என்பார்.


பூக்கமழ் நாற்றம் கொண்டு பொறிவழி போகுமாபோல் 

தீக்கனல் கின்ற வேலோய் ஜீவன் என்கின்ற சீரோன் 

ஆக்கையை எய்தும் போதும் அதனை விட்டேகும் போதும் 

போக்கரிதாய ஆறு புலன்களை கொண்டு போமால் 

பகவத் கீதை


புஷ்பத்தினுடைய வாசனையை காற்று இழுத்துக்கொண்டு சென்று வெகுதூரத்திலுள்ளோருக்கும் மணம் தரும். காஷ்மீரில் குங்குமப் புஷ்பம் ஆகஸ்ட் மாதத்திலே பூக்கும். காற்று கொண்டுவர பல மைல்களுக்கப்பாலேயே அந்த வாசனை வரும். அதுபோல் உலக வாசனைகளையெல்லாம் சேகரித்து வைத்திருக்கின்ற அந்த ஜீவன் எத்துணை வாசனையையும் சேகரித்து வைத்துள்ள மனத்தோடே அதையும் எடுத்துக்கொண்டு வாசனையைச் சேகரிக்கின்ற இந்திரியங்களின் எண்ணங்களோடு ஜீவனாகிய அபிமானி அடுத்த உடலிலே புகுவான் என்று கூறப்படுகின்றது.


பூக்கமழ் நாற்றம் கொண்டு பொறி வழி போகுமாபோல் மலரினது வாசனையை காற்று வெகு தொலைவு கொண்டு செல்வது போன்று. பொறி-காற்று, இந்திரியங்களையும் குறிக்கும்.


ஜீவன் என்கின்ற சீரோய்-ஜீவன் உலகப் பொருட்களை


மட்டும்தான் சேகரித்துவைக்கும்.மெய்ப் பொருளைச் சேகரிக்க ஆரம்பித்தால் அமிழ்ந்து போய் விடும்-உப்பு, சமுத்திரத்தின் ஆழங்காணப் போவதுபோலத்தான். உப்பு சமுத்திரத்தில் கலந்துவிடுமன்றோ! தன்னை அறிய வேண்டுமென விருப்பம் வந்துவிட்டால் ஜீவத்தன்மை அழிந்து மெய்ப் பொருளாக மாறும்.


ஆக்கையை எய்தும்போதும் அதனை விட்டேகும்போதும் ஆக்கை -சரீரம் - ஒரு சரீரத்திலே புகுகின்ற சந்தர்ப்பத்திலும், ஒரு சரீரத்திலிருந்து வெளியே போகும் போதும். போக்கரிதாய ஆறு புலன்களைக் கொண்டு போமால் - பஞ்சேந்திரிய வாசனையை அபிமானித்துக் கொண்டிருக்கப்பட்ட ஜீவன் மனதையும் சேர்த்து மனது சென்றால்தானே பஞ்சேந்திரியங்கள் வாசனை அறியும் மனதோடு சேர்த்துக் கொண்டு பஞ்சேந்திரிய வாசனை எடுத்துக்கொண்டு அந்த ஜீவன் அடுத்த உடலிலே போய் புகுந்துவிடும்.


இது உபநிஷத்துக்களின் கருத்துக்கள். இதையெல்லாம் கற்றுத் தெரிந்து கொண்டவர்களல்லவா சோமநாதயோகி! ஆகவே பார்வதி தேவியின் உடம்பிலுள்ள அணுக்களெல்லாம் ராம நாமம் சொல்ல வேண்டும் என்று கூறினார். அம்மையும் "மந்திரம் சொல்லிக் கொடுங்கள். சொல்லுகிறேன்" என்றார். சோமநாத யோகி மந்திரம் சொல்லிக் கொடுக்க, பார்வதி தேவி நெடுங்காலம், நிரந்தரம், நேயத்தோடு, நியமத்தோடு அப்யாசம் செய்து வந்தார்.


ராம நாமம் சொல்லச் சொல்ல உடம்பிலுள்ள ரத்தமும் ராம நாமம் சொல்லும். உடல் பௌருஷம் பெறும். பார்த்தாலே உடல் ஆரோக்கியம் பெருகுவது தெரியும். அழகு கூடும். தெளிவு கிடைக்கும். ராம நாமத்தை உண்மையாக உள்ளத்தோடு ஒன்றி சொன்னால்தான். தெளிவு, அழகு, ஆரோக்கியம், ஆயுள் விருத்தி அனைத்தும் பெருகும். அம்மையும் உள்ளன்போடு ராம நாமம் சொல்லத் தொடங்கினார்கள்.இரவும் பகலும் எந்நேரமும் ராம நாமமே அவரது மூச்சாக இருந்தது. படுத்து நன்றாக உறங்கும் போது பார்வதி என அவர் அழைத்தால் அந்த அம்மையார் ராம் ராம் ராம் என துதித்துக் கொண்டேதான் எழுவார்கள். அந்த அளவுக்கு ராம நாம் ஈடுபாடு முதிர்ந்துவிட்டது.


நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே!!' நற்றவத்தவர் உள்ளிருந்து ஓங்கும் நமச்சிவாயத்தை நான் மறவேனே!'


என வள்ளலார் பாடுகின்றார். வாக்குச் சொல்லிக் கொண்டே இருக்கலாம். மனம் வேறு காரியங்களைச் செய்யலாம் என்கிறார்கள் பெரியவர்கள். வாக்கினாலே சொல்லிச் சொல்லிப் பழகிவிட்டோமானால் அது உள்ளத்திலே பதிந்துபோய்விடும். பார்வதி தேவியும் அப்படிப் பழகிவிட்டார்கள்.


ஒரு தினத்திலே இருவருமாக யாத்திரை சென்று இராமேஸ்வரத்திலே தங்கி இருக்கின்ற காலத்திலே ஒரு நாள் பார்வதி தேவியின் சொப்பனத்திலே ஒரு சத்புத்திரன் கிடைக்கும் என்று ராமநாதருடைய அனுக்கிரகம் கிடைத்தது. இதனை சோமநாத யோகியும் தமது சொப்பனத்திலே அப்போது தெரிந்து கொண்டார். தேவியும் எழுந்துவந்து கணவனை வணங்கி எழுந்தார். சோமநாத யோகி, "பார்வதி! நீ கண்ட கனவை நானும் கண்டேன். இனி நாம் ஊருக்குப் போவோம் வா" என அழைத்துக் கொண்டு மதுரை வந்து சேர்ந்தார். பத்து மாதம் கழித்துத் தங்க விக்கிரகம் போன்ற அழகான ஆண் குழந்தை பிறந்தது. பிறந்தவுடனே அக்குழந்தைக்கு சிவராமகிருஷ்ணன் எனப் பெயர் சூட்டினார். ராமர் சிவனை பூஜித்த இடத்திலே அனுக்கிரகம் கிடைத்தமையால் சிவராம கிருஷ்ணன் என்று தீர்மானித்தார். நீண்ட நாட்களாகக் குழந்தையில்லாது இருந்து பிக்ஷையாகக் கிடைத்ததனால் பிக்ஷு" என்று அழைத்தார்கள். சிவராம கிருஷ்ணனுக்கு மூன்று வயதாகும் முன்னமே சோமநாத யோகி தவம்புரிய இமயபர்வதம் சென்றுவிட்டார்.

இளமைப் பருவம்

இளமைப் பருவத்திலேயே சிவராமகிருஷ்ணனை வேதபாட சாலைக்கு அனுப்பினார்கள். முற்பிறவியில் சாஸ்திரம் கற்றவர கையினால் வேதங்கள் நான்கினையும் வெகு சீக்கிரத்தில் அவர் கற்றுத் தேர்ந்தார். அதன் ஆழ்ந்த கருத்துக்களை அதிசீக்கிரத்தில் தெரிந்து கொண்டுவிட்டார். பழைய பிறவியில் செய்த முதுதவம் பாடம் போல, "முன்னைப் பின்னைப் பிறவியிற் பெற்றால் அறியலாம்" என்ற திருமூலர் வாசகத்திற்கு உதாரணமாக வெகு சீக்கிரத்தில் சாஸ்த்திரங்களை அறிந்து கொண்டார். பெரிய கனபாடிகளும், சாஸ்த்திரிகளுமே அவரது சாஸ்த்திர அறிவு கண்டு அதிசயித்தனர்.


அவருக்கு சாஸ்த்திரம் கற்றுத் தந்த சாஸ்த்திரியார் இனி சிவராமகிருஷ்ணன் திருவிசை நல்லூர் ஸ்ரீதர வேங்கடேச அய்யா வாளிடத்திலே சென்று கற்றால்தான் மனம் சாந்தி பெறும் எனச்சொல்லிவிட்டார். இதைத் தாயாரிடம் சென்று ஆதரவோடு வணங்கி அனுமதி தரவேண்டும் எனப் பிரார்த்தித்தார். தாயார் புன்முறுவலோடு குளிர்ந்த பார்வை பார்த்து "சிவராமா, நீ இன்னும் கொஞ்சநாள் பொறுத்திரப்பா" என்று சொல்லிவிட்டார்கள், தாய் சொல் துறந்தால் வாசகமில்லை. தாயார் வார்த்தைக்குப் பதில் சொல்லிவிட்டுப் போனால் அந்தக் காரியம் சித்தியடையாது. அதனால். எக்காரணம் கொண்டும் தாயார் வார்த்தைக்குப் பதில் சொல்லக்கூடாது என்ற எண்ணத்தில் சிவராமகிருஷ்ணனும் பொறுத்திருந்தார். இதற்கிடையே பன்னிரண்டு வயதே நிரம்பிய சின்னக் குழந்தையான சிவராமகிருஷ்ணனுக்குச் சீக்கிரத்திலேயே திருமணம் முடித்துவிடப் பார்வதி தேவி திட்டம் போட்டார்கள். மிக மிக உயர்ந்தவன் பார்வதியின் புத்திரன். எல்லாக் கலைகளையும் முற்பிறவியிலேயே கற்றவன். அவனுக்குப் பொன்னும் பொருளும், கொடுக்க வேண்டுமெனப் பலர் முன் வந்தனர். தேடிக் கண்டுபிடித்து அருகதையுள்ள குலத்திலே ஐந்து வயதே நிரம்பிய பெண்


குழந்தையை அவருக்குத் திருமணம் செய்துவைத்தனர். அந்தப் பெண் குழந்தையின் தாய் தந்தையர் செய்ய வேண்டிய சீர்வரிசையெல்லாம் செய்து முடித்ததும் பார்வதிதேவியிடம் பெண்ணை கொஞ்சநாட்கள் தாங்களே பாதுகாத்து வளர்த்துப் பணி விடை புரியும் பிராயம் வரும்பொழுது கொண்டு வந்து விடுவதாகக் கூறி அனுமதி வேண்டினர். பார்வதி தேவியும் சந்தோஷத்தோடு அனுப்பி வைத்தார்கள். சிவராமகிருஷ்ணனுக்கோ அதைவிட சந்தோஷம் வந்து விட்டது. இனிதாம் நினைத்தது போல கற்றுவர அனுமதி வேண்டி மிகப் பணிவோடு கேட்டுக் கொண்டார். தாயாரும் மகிழ்வோடு அனுமதி கொடுத்துத் திருவிசை நல்லூர் அய்யாவாளிடத்திலே கற்றுவர அனுப்பி வைத்தார்கள்.


ஸ்ரீதர வேங்கடேச அய்யாவாள் இடத்திலே சென்று கற்று வருங்காலத்திலே சில நாட்களுக்குள்ளாகவே அய்யாவாள் சிவராமகிருஷ்ணனுடைய சாஸ்த்திரத் தேர்ச்சி கண்டு வியப்படைந்தார். பொதுவாக சாஸ்த்திரங்களைக் கற்கிறோம். அனுபவம் பெறும் முறைகளைத் தெரிகிறோம். ஆனால் சிவராமகிருஷ்ணனோ சாஸ்த்திரங்களைக் கேட்கும் போதே அனுபூதி பெறுகிறாள். அனுபவத்தின் முதிர்ந்த நிலைபெறுகிறாள். ஆகவே இவளை இங்கே வைத்திருக்கக்கூடாது. பரமசிவேந்திராளிடம் அழைத்துச் சென்று கற்க ஏற்பாடு செய்ய வேண்டும் என எண்ணி பரமசிவேந்திராளிடம் அடைக்கலமாகச் செய்தார்.


சில மாதங்களுக்குள்ளாகவே அத்யாத்ம சாஸ்த்திரக் கருத்துக்களையெல்லாம் சிவராமகிருஷ்ணன் எளிதாகக் கற்று உணர்கிறார். ஏகச் சந்தக் கிராகியாக விளங்கினார். சிருங்கேரி சச்சிதானந்த சிவாபிநவ நரசிம்ம பாரதி மகா சுவாமிகள் இவருடைய பெருமையைச் சொல்லும் போது நிஜ குரு பரமசிவேந்திர சிலாகித விக்ஞான காஸ்டாய, எனத் தோத்திரப் பாடலிலே குறிக்கிறார். பரமசிவேந்திராள் என்ற குருவே சிலாகித்துப் பேசுவாராம் சிவராம கிருஷ்ணனை! அத்தகைய தீட்சண்யமான திருஷ்டியுடையவராக சிவராமகிருஷ்ணன் திகழ்ந்தார்.

மைசூர் சமஸ்தானத்தில் அரசு பதவி

மைசூர் சமஸ்தாளத்திலே சமஸ்தான வித்வான் அமைப்பதற்காக பெரிய வித்வான் கிடைக்காமல் மந்திரி பிரதானிகள் பல தேசங்களில் தேடி வரும்போது தஞ்சாவூரில் இவரது பெருமையனைத்தையும் கூறக்கேட்டுத் தெரிந்து கொண்டார்கள். பரமசிவேந்திராளை அணுகி தண்டாகாரமாக நமஸ்காரம் செய்து, "நற்குணமுடைய தங்களது சீடர்களிலே சிவராமகிருஷ்ணன் உயர்ந்த சீடர் எனக் கேள்விப்படுகிறோம். சகல கலைகளையும் கற்றவராகத் தெரிகிறது. மைசூர் சமஸ்தானத்திலே பெரிய வித்வான் இல்லை. தயைகூர்ந்து இவரை அனுப்பி வைக்கவேண்டும்" எனக் கேட்டுக் கொண்டனர். சிவராமகிருஷ்ணனை அனுப்பிவைப்பதன் மூலம் தமக்குப் பெருமைகிடைப்பதல்லாமல் இராஜ்ஜியத்தில் ஒரு நல்லது நடக்கட்டும் என்று நினைத்து பரமசிவேந்திராள் இவரை அனுப்பி வைத்தார்கள்.


மைசூர் சமஸ்தான வித்வானாக சிவராமகிருஷ்ணன் அமர்ந்தார். வருகின்ற வித்வான்களையெல்லாம் பரீட்சிக்கின்ற பணியை மகாராஜா இவரிடம் விட்டுவிட்டார். இவர் பரீட்சித்து என்ன பரிசு கொடுக்கலாமென்று கூறுகிறாரோ அந்தப் பரிசையே கொடுக்கும்படி மந்திரிகளுக்கும் உத்தரவிட்டார். இவர் எல்லாக் கலைகளிலும் முதிர்ந்த தேர்ச்சி பெற்றவராகையால் வந்த வித்வான்கள் அனைவரும் இவரால் தோற்கடிக்கப்பட்டனர். ஆயிரம் ரூபாய் பரிசு கொடுக்கவேண்டிய இடத்திலே ஐநூறு ரூபாய் பரிசுதான் கொடுக்கும்படிச் சொல்வார். 64 கலைகளிலே எந்தக் கலையாக இருப்பினும் அதன் கருத்துக்களை இவர் தெளிவுறத் தெரிந்து வைத்திருந்தார். 32 ராகங்களிலே ஏதேனும் ஒரு ராகம் இன்னொன்றுடன் கலந்து விட்டால் உடனே கண்டுபிடித்துச் சொல்லிவிடுவார்.


இந்த நிலையினை தஞ்சாவூரிலுள்ள சாஸ்திரிகளில் ஒருவர் அறிந்தார். பெயர் கோபால கிருஷ்ண சாஸ்திரி என்பதாக ஞாபகம். சிவராமகிருஷ்ணனை வெற்றி பெற்று தான் சமஸ்தான வித்வானாக வேண்டுமென நினைத்து மைசூர் சென்றார். வித்வத் சபையிலே மேடைமீது சிவராமகிருஷ்ணன் உட்கார்ந்திருக்கிறார். தூரத்தில் வரும்போதே அவரது பார்வை கோபாலகிருஷ்ண சாஸ்திரிகளைக் கவர்ந்தது. அருகே வந்த சாஸ்திரிகள் தண்டாகாரமாக வணங்கி, "குருவே! தங்களுக்குச் சேவை செய்ய வந்திருக்கிறேன்" என்று கூறினார். இருக்கச் சொல்லிவிட்டார் சிவராமகிருஷ்ணனும். யாராவது உண்மையான அன்போடு சேவை செய்ய வந்தால் வேண்டாமென்று. சொல்லக்கூடாது. சேவை செய்ய ஏற்றுக் கொள்கிறார். ஆப்த, அங்க, தான, சத்பாவமென்று சதுர்வித சேவை.


ஆப்தப் பணிவிடை என்று சொன்னால் குரு நினைப்பதை சிஷ்யன் செய்வது, தகப்பன் நிளைப்பதை மகன் செய்வது, கணவன் நினைப்பதை மனைவி செய்வது, ஏவா மக்கள் மூவா மருந்து, இன்னது செய் என்று சொல்லு முன்பே அதைத் தெரிந்து செய்வது ஆப்தப் பணிவிடை. இதற்குக் கணவனுடைய உள்ளத்தேயே குடிகொண்டிருந்தால்தான் ஆப்தப் பணிவிடையை மனைவி செய்ய முடியும். அப்படிச் செய்தவர்கள் அனுசூயாதேவி, வாசுகிஅம்மையார். அதளாலேயே வள்ளுவரும் வாசுகி அம்மையைத் தோத்திரம் செய்கிறார்.


தெய்வம் தொழாஅள் கொழுநற் றொழு தெழுவாள் 

பெய்யெனப் பெய்யு மழை

என்பது குறள்.


கடவுள் வேறு எங்கேயோ இருப்பதாக நினைக்க மாட்டார்களாம். கணவனே கடவுள் என எண்ணுவர். கொழுநற் றொழுதெழுவாள் தொழுது எழுவாள் என்ற கருத்து சிறப்புடையது. எழுந்துதானே தொழவேண்டும். உறங்கும்போது எப்படித் தொழுவது என ஐயம் ஏற்படலாம். பரிமேலழகர் அதற்குப் பதில் சொல்கிறார். கணவனுடைய எண்ணத்தை மறந்திருந்தாலல்லவா எழுந்து தொழ முடியும்? மறக்காமல்தானே உறங்கினாள் கற்புடைய மங்கை! ஆகவே எழுந்து தொழுவதில்லை. உள்ளத்திலேயே உள்ள கணவனைத் தொழுது எழுவாள் என்று கூறினார்கள். ஒருவருடைய உள்ளத்திலேயே குடிகொண்டிருந்தால்தான் ஆப்தப் பணிவிடை செய்ய முடியும். நினைத்ததை அறிந்து செய்ய முடியும்.


அடுத்தது அங்கப்பணிவிடை. சரீரத்திற்கு வேண்டிய சேவை. மற்றது தானப் பணிவிடை. தந்தையின் அலுவல்களில் மகனும், குருவின் அலுவல்களில் சிஷ்யனும் பங்கெடுத்துக் கொண்டு செய்வது தானப் பணிவிடை. உடை, படுக்கும் இடம் பரிசுத்தம் செய்தற் போன்றது தானப் பணிவிடை.


சத்பாவப் பணிவிடை என்பது குருவைக் கடவுளாக நினைப்பதாம். வேறு கடவுள் இல்லை, அதே போன்று கணவனையே மனைவி கடவுளாக நினைப்பது. தந்தையையே மகன் கடவுளென நினைப்பது.


குல மகட்கு தெய்வம் கொழுநனே

மன்ற புதல்வர்க்குத் தந்தையும் தாயும்

அறவோர்க்கு அடிகளே தெய்வம் அனைவோர்க்கும் தெய்வம்

இலை முகப் பைம்பூண் இறை

என்றார் குமரகுருபர சுவாமிகள்


இவ்வாறு சதுர்வித சேவைகளை கோபாலகிருஷ்ண சாஸ்த்திரிகள் ஒழுங்காகச் செய்யத் தொடங்கி விட்டார். அவரது மகிழ்ந்து சிவராமகிருஷ்ணன் ஆசீர்வாதம் பண்ணினார். சேவையில் சமயம் பார்த்து சாஸ்திரியார் அவரிடம் அவரது பரமகுருவைத் தரிசிக்க வேண்டுமென்று விரும்புவதாகச் சொன்னார். பரமகுரு எனில் குருவுக்கு குரு. இவரும் பரமசிவேந்திராளைத் தரிசிக்கும் விதி முறைகளைச் சொல்லி வதியும் இடமும் வழியும் கூறி அனுப்பி வைத்தார்.


பரமசிவேந்திராளைக் கண்டவுடன் சாஸ்திரியார் தண்டாகாரமாக வணங்கி, சிறிது நேரம் அன்பான வார்த்தைகளாலே அவரைப் புகழ்ந்தார். பின்னர் சிவராமகிருஷ்ணனைப்பற்றி விரித்துரைக்க ஆரம்பித்து விட்டார். "தேவரீரின் சிஷ்யக் கோடிகளிலே மிக மிக உயர்ந்தவர் சிவராமகிருஷ்ணன். அவர் சமஸ்தானத்திலே வித்வாளாகப் பதவியில் இருப்பதால் வருகின்ற வித்வான்களை வெற்றிபெறுவதிலேயே குறிக்கோள் கொண்டிருக்கிறார். வித்வான்கள் விரும்பிய பரிசு கிடைப்பதில்லை. இதனால் இராஜ்ஜியத்திற்கு கௌரவக் குறைவு ஏற்பட வழியாகிறது. மேலும் வித்வான்களை ஜெயிக்க கேள்வி சேகரிப்பதிலேயே கருத்து வைப்பதால் தவம் செய்ய நேரமில்லை. இன்னும் மகாராஜா சமஸ்தான வித்வானை அழைத்து வா என்றால் இவர் அவர் முன்னால் கைகட்டி நிற்கவேண்டும். ஆனால் அவ்விடத்திலிருந்து வெளியேறி தவம் செய்ய ஆரம்பித்தால் அவரை தரிசிக்க மகாராஜாக்கள் காத்துக்கிடப்பார்கள்" என்று கூறினார். இது உண்மையே எனப் பரமசிவேந்திராள் அறிந்து "நீ சிவராமகிருஷ்ணனிடம் நான் அழைத்ததாகத் தெரிவித்துவிடு" என்றார்.


சில தினங்கள் கழித்து மைசூர் சென்ற சாஸ்த்திரியார் அவரை வணங்கி அவரது குருநாதர் அவரைத் தரிசிக்க விரும்புகிறார் என்று கடுமையான வார்த்தை கூறினார். அப்படியே அவரது கண்களிலிருந்து கண்ணீர் வந்தது. குருநாதர் தரிசிக்க விரும்புகிறார் என்று சாஸ்த்திரியார் சொல்லக்கூடாது. உடனே ராஜினாமா செய்து விட்டுக் குருநாதரைக் காண சிவராமகிருஷ்ணன் புறப்பட்டு விட்டார்.


நீ உன் வாயை அடக்கக் கற்றுக் கொள்ளவில்லையே

குருநாதரை வணங்கி எழுந்து நின்ற சிவராமகிருஷ்ணனை நோக்கி பரமசிவேந்திராள், "ஊரார் வாயெல்லாம் அடக்கக் கற்ற நீ உன் வாயை அடக்கக் கற்றுக் கொள்ளவில்லையே" எனக் கேட்டார். அந்த நிமிடத்திலிருந்தே இனிப் பேசுவதில்லை என்று தீர்மானித்து மௌனியானார். குருநாதரும் அவருக்குச் சந்நியாசம் கொடுத்து சதாசிவம் என்ற பெயரையும் சூட்டி "உனக்குப் பிரியமான இடத்திற்குச் சென்று நீ தவம் இயற்றலாம்" எனச் சொல்லிவிட்டார்.


சதாசிவம் புறப்பட்டு நெரூர் வந்து சேர்ந்தார். நிர் ஜனப் பிரதேசம், மலையின் உச்சி, நதிக்கரை, அழகிய வனம், சமதரை இவை தவம் பண்ணுவதற்குத் தக்க இடம். நெரூரை அடைந்த சதாசிவம் தவம் பண்ணுவதற்குத் தகுந்த இடம் என அறிந்து தங்கினார். சகல கலைஞானம் உள்ளத்தே நிரம்பி இருக்கிறது. அய்யாவாள், பரமசிவேந்திராள் இருவரிடமும் சகல சாஸ்திரங்களையும் கற்றறிந்தார். மந்திர யோகம், பரிச யோகம், பாவ யோகம், அபாவ யோகம், மகா யோகம் என்ற ஐந்து யோகங்களையும் அனுஷ்டிக்க ஆரம்பித்தார்.


ஓங்காராதிகள் அனுசந்தா நத்தாற் பரத்தில்

உள்ள மடங்குதலே மந்திரயோகம் அதனோ 

டீங்காகு மநபவந மொன்றாய் மூலத்தினிருஞ் 

கழினை வழிசென்று சென்னி நடுவிருந்த 

தேங்கான்ம வொளியின் மனோலயமாதல் பரிசம் 

சிரம் துறக்கம் செவிதிசைகள் இருகடர்கள் விழி தீ 

பாங்காய முகம் உந்தி விசும்பு நிலம் பதமாம் 

பரமன் உருவாய விராட்புருட வடிவெனினும்

அன்றி அளவுறு பெருந்தோட் படைபணியோடுற்ற 

அண்ணல் வடிவெனினும் நினைந்தவயவங்கள் தம்மில் 

ஒன்றொன்றை விடுத்து நின்ற அவயவி மாத்திரமாம் 

உண்மையாம் பிரமத்தின் மனமடங்கல் பாவம் 

சென்றளவு கரணமுறாவொரு பிரமந் தன்னில் 

சிந்தையடங்குதல் அபாவம் படைப்பில் ஒழிவிற் 

தன்தெரிதல் தெரியாமை யிடத்தினோர் பரிசாய்த் 

தன் வடிவாம் பிரமத்தின் மனமிறல் மாயோகம்


இந்த யோகங்களில் வெற்றி பெற்றார் சதாசிவம். மந்திரத்தை இடைவிடாது ஜெபித்ததால் வேறு விஷய சிந்தனை அற்றுத் தொலைந்தவுடனே மெய்ப்பொருளாக மாறிவிடுவார்களாம். அதற்கு மந்திர யோகம் என்று பெயர்.


சுவாசத்தோடு மந்திரத்தைச் சேர்த்துப் பழகிக் கொள்வது பரிசயோகம். இதனை குண்டலினி யோகம் என்றும் கூறுவர். இதனால் ஆகாய கமனம், பரகாயப் பிரவேசம், பூமியில் புதைந்திருக்கிற தன்மை, முதிர்ந்தால் அநிமாதி ஐச்வர்யங்களும் சித்தியாகும். உடலோடு நீண்ட நாட்களுக்கு வாழலாம். இந்த நியமங்களைக் கடைப்பிடித்து அதிலே வெற்றிபெற்றார். ஆகாயத்திலே பறந்தார். பிறர் கண்ணுக்குத் தெரியாமல் போய் வந்து கொண்டிருந்தார். மண்ணுக்குள்ளேயும் புதைந்துகிடந்தார். இது பரிசயோகம்.


உலகத்தில் காண்கின்ற பொருள்களெல்லாம் மண்ணிலிருந்தே உண்டானதென்று அறிவோம். இந்த மண் கடவுள் வடிவம். எல்லாமே கடவுள் வடிவம். அது மெய்ம்மை.


நில நீர் நெருப்புயிர்

நீள் விசும்பு நிலாப்பகலோன்

புலனாய மைந்தனோ டெண் வகையாய்ப் புணர்ந்து நின்றா

னுலகே ழெனத் திசை 

பத்தெனத்தா னொருவனுமே 

பலவாகி நின்றவா 

தோணோக்க மாடாமோ

என்பது திருவாசகம்.


பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம், சூரியன், சந்திரன், ஜீவன் இந்த எட்டும் சச்சிதானந்த வடிவத்திலே கற்பிக்கப்பட்டவை. கற்பனை கடந்த ஜோதி கடவுள். அதனால் கற்பனை வடிவம் கடவுள் என்று பாவனை பண்ணிப் பழகவேண்டும். உலகத்தைத் தோன்றச் செய்து, அவ்வுலகத்தில் கண்ணுக்குத் தெரிகின்ற மனத்தால் நினைக்கும் பொருள்களெல்லாம் கடவுள் என்று பாவனை செய்துவிடுகின்றோம். அப்போது எந்தப் பொருளிடத்திலும் ஆசையும் துவேஷமும் வராது. அந்தப் பாவனையை பெருக்கிவிட்டோமானால் கற்பளைப் பொருட்களெல்லாம் கற்பனை கடந்த வடிவமாகும். அதே கடவுள் என்ற பதத்தின் மெய்ம்மை வடிவம் என்ற பாவனை முதிர்ந்து விட்டால் பாவயோகம்.


அடுத்த நிலையில் எல்லாப் பொருட்களும் கடவுள் வடிவமே என்ற எண்ணத்தை விட்டுவிட்டுத் தானே கடவுள் என்று எண்ணுகிறோம். தனக்கு அந்நியமாகக் கடவுள் இல்லை என்ற பாவனை மிகுந்தால் அபாவயோகம்.


மகாயோகம் என்பது தானே எல்லாம் என்ற எண்ணத்தையும் மறந்துவிடுவது ஆகும். அந்த எண்ணத்தை விட்டுவிடுதல் மகாயோகம். இந்த ஐந்து யோகங்களும் பூர்த்தியடைந்த பிற்பாடு சதாசிவ பிரம்மத்தின் அதியற்புத யோகசித்திகள் நடந்துள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கு காண்போம்.

அடுத்து வருவது 

சதாசிவ பிரமேந்திரா் நிகழ்த்திய அற்புதங்கள்




 


கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

*காருகுறிச்சி அருணாசலம்* அவர்களின் வாழ்க்கை வரலாறு

சீர்காழி முத்துத்தாண்டவர்

வலசி தில்லானா ஸ்வரம் / சாகித்யம் PDF File